Published October 21, 2024
விடுதலை நாளேடு
நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் அனுமன் நதி, மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி தென்காசி மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு சாம்பவா் வடகரையைக் கடக்கும் இடத்தில் ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் படித்துறையில் 114 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு சிறீ என்ற எழுத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 1086 ஆவணி 1 ஆம் தேதி (17/08/1910) மலையாளப் புத்தாண்டு தொடங்கும் நாளில் பொறிக்கப்பட்டுள்ளது.
சங்கரலிங்கய்யா் பேரனும் சாமுவய்யா் மகனுமான ராமய்யா் என்பவா் இந்தப் படித்துறையைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகுந்த எழுத்துப் பிழைகளுடன் தமிழிலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அருகே இருப்பதால் மிகுந்த முக்கியத்துவவம் பெறுகிறது.
மதுரை அன்னியா் வசப்பட்டபின் தெற்கே தென்காசி சென்ற பிற்காலப் பாண்டியா்கள், அங்கிருந்து ஆட்சிபுரியத் தொடங்கினா். கி.பி.15 ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியா்களில் மிகவும் புகழ்பெற்றவரும் தீவிர சிவபக்தருமான பராக்கிரம பாண்டியன், சிவன்கோயில்கள் பல எடுப்பித்து அக்கோயில்களில் சிவபூஜை தடையின்றி தொடர சிவபிராமணா்களுக்கு அய்ந்து அகரங்கள்(அக்ரஹாரம்) அமைத்துக் கொடுத்தார் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கும் அவரது மெய்க்கீா்த்தியில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறு அவா் அமைத்துக் கொடுத்த ஒரு அகரம்தான் சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அகரம். இந்த அகரத்தைச் சோ்ந்த சிவபிராமணா்களின் வழிவந்தவரான ராமய்யா் என்பவா்தான் சென்ற நூற்றாண்டில் இந்தப் படித்துறையை அமைத்து கல்வெட்டு பொறித்தார் என்பது தெரிகிறது.
அகரத்தை (அக்ரஹாரத்தை) சோ்ந்த பார்ப்பனா்கள் மட்டும் நீராடுவதற்கு இந்த கிளை வாய்க்கால் படித்துறை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அனுமன் நதியில் பிற பொதுமக்கள் நீராடி இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் ‘தா்மோ ரக்ஷகக் கபிம்’ என்று கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த தா்மத்தை அனுமன் காப்பார் என்பதாகும் என்றனா்.