திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஈரோடு மாவட்டத்தில் 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு


ஈரோடு, பிப்.24,  ஈரோடு  மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள  ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ஆம்  நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி  இருந்ததும், கொங்கு மண்டலத்தின் மிகவும்  பழைமையான ஏரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு கூறியதாவது: கல்வெட்டில் ‘செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது’ என கூறப் பட்டுள்ளது. ஏரியின் கரை ‘சிறை’ என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு  ‘வாய்’ என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு  நட்டன் வாய் என்று  அழைக்கப்பட்டது.

இந்த ஏரியின் பயனை  நாடாளரின் வழியினராகிய ‘மக்கள் மக்கள், பேரர் பேரர்’  அதாவது நாடாளரின்  வம்சத்தினர் அனுபவித்த தாக  குறிப்பிடப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90  அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய  மக்களின் தொடக்க முயற்சியை  இது காட்டுகிறது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.

 - விடுதலை நாளேடு, 24.2.20

புதன், 19 பிப்ரவரி, 2020

உத்தமதானபுரம் (தஞ்சைமாவட்டம்) பெயர்க் காரணம்

திராவிடக் கட்சிகளால்தான் நாடு குட்டிச்சுவரானது...என்று ஒப்பாரி வைத்து
தமிழ்நாட்டை காப்பாற்றப் புறப்பட்டிருக்கும்
திடீர் ஊழல்ஒழிப்பு போராளிகளின்
மேலான கவனத்திற்கு...

தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் படைபரிவாரங்களுடன் பயணம் சென்றாராம்.
இடையே ஒரு இடத்தில் உணவருந்திவிட்டு,
தாம்பூலம் தரித்துக்கொண்டு மந்திரி பிரதானிகளிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.
பேச்சுவாக்கில் இன்று என்ன திதி என்று கேட்டாராம். இன்றிருப்பதை போல் அன்று நாட்காட்டி இல்லாததால் மந்திரிகள் உடனடியாக ஒரு பஞ்சாங்க பார்ப்பனரை மன்னரிடத்தி்ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பஞ்சாங்கத்தை கணித்த பார்ப்பனர்;
மன்னா, இன்று ஏகாதசி திதி என்று சொல்ல
மாவீரர் குலத்திலகமான 
மன்னாதி மன்னரும், மங்குனி மந்திரிகளும்
அதிர்ச்சியடைந்து அலறினார்களாம்! காரணம்.... ஏகாதசியன்று மன்னர் விரதமிருப்பார். உணவருந்தமாட்டார்.
ஆனால், 
இன்று உணவும் உண்டு தாம்பூலமும் தரித்தாகிவிட்டது. 
என்னசெய்வது? 
விரதபங்கமாகிவிட்டதே?
பாவம் வந்து சூழ்ந்து விட்டதே?
நரகத்திற்கு செல்லாமல் தப்புவது எப்படி?
நம்பெருமான் மோட்சத்திற்கு செல்வதெப்படி?
என ஒரே பரபரப்பு...அங்கலாய்ப்பு...

பரிகாரமென்ன பூதேவரே? என்று 
பஞ்சாங்க பார்ப்பனரின் காலைப்பிடித்து
மன்னர் கெஞ்ச...
கவலைவேண்டாம் அரசே, பரிகாரம் உள்ளது.
நீங்கள் தங்கியுள்ள இந்த இடத்தில்
கிழக்கு மேற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும்,
வடக்கு தெற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும் கட்டி, 
இரண்டு வீட்டிற்கு ஒரு கிணறு வெட்டி,
ஆகமொத்தம் நூற்றி எட்டு அந்தணர்களுக்கு
பொன்னும், பொருளும், நிலமும், பசுவும்
கொடுத்து குடியமர்த்தினால் செய்த பாவம் தீருமென்று சொன்னானாம் பஞ்சாங்கப்புலி!
அப்படியே ஆகட்டுமென்றான் மன்னன்.

அரசகட்டளை பிறந்தது!
அந்தணர்கள் மனம் குளிர தாணங்கள் வாரிவழங்கப்பட்டது...
வந்த பாவம் தொலைந்ததென்று
அகமகிழ்ந்தானம் அறிவுகெட்ட அரசன்.

உத்தமமான தானத்தை செய்ததால்
இன்று முதல் இவ்வூர் உத்தமதானபுரம்
என்று அழைக்கப்படும் என புகழ்ந்து பாடினார்களாம் புத்திகெட்ட புலவர்பெருமக்கள்!
இந்த #உத்தமதானபுரம் தஞ்சைமாவட்டம்
பாபநாசம் அருகில் உள்ளது.
இதுதான் மகாஉபாத்யாயா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்!
தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் தனது ஊரின் தோற்றத்தை எழுதியிருக்கிறார் தமிழ்தாத்தா.
 _____________________________________________

ஒருநாள் மன்னர் கிருஷ்ணதேவராயர்
சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தாராம்.என்னவென்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நிற்க....
அரண்மனை ராஜகுருவை அழைத்தாராம் மன்னர். 
வந்த ராஜகுருவின் காலில் விழுந்த மன்னரைப் பார்த்து 
மங்கலம் உண்டாகட்டும் என்று ஆசீர்வாதம் செய்தவிட்டு  ஏனிந்த கவலை? என்று கேட்டாராம் ராஜகுரு.

குலகுருவே, எனது் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது மாம்பழம் சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால்....உயர்ரக மாம்பழங்களை கொண்டுவருவதற்குள் உயிர் பிரிந்து விட்டதே... பெற்ற தாயின் கடைசி ஆசையை
நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்டேனே,
இதற்கு பரிகாரமென்ன என்று கேட்டாராம்.

அதற்கு ராஜகுரு, 
மன்னா...இதென்ன பிரமாதம்? 
நமது நாட்டிலுள்ள
வேதமறிந்த பிராமணர்களுக்கு
தங்கத்தால் மாம்பழம் செய்து
தானம் கொடுத்தால் பாவம் தீரும், தங்களது
தாயின் ஆசையும் நிறைவேறும் என்றாராம்.

மன்னரின் பாவம் தொலைக்க
மக்கள் பணத்தில் தங்க மாம்பழம் வழங்கப்பட்டது பார்ப்பனர்களுக்கு!

இப்படி மன்னராட்சி காலத்திலும்,
அதன்பிறகு வந்த வெள்ளையர் காலத்திலும்
மக்கள் பணத்தை, பொதுச் சொத்தை
அரச சுகபோகத்தை, வேலை வாய்ப்பை
ஏகபோகமாக கொள்ளையடித்த இவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு பேசுகிறார்கள்.

ஒரு அறுபது ஆண்டுகளாக.... தேர்தல் முறை வந்த இந்தகாலத்தில் 
அரசை கைபற்றிய சாமானிய மக்களுக்கு
அதை மக்களுக்குரியதாக பயன்படுத்த தெரியவில்லை.

புதிதாக உள்ளே நுழைந்தவன் கிடைத்தவரையில் சுருட்டுகிறான்.
கேள்வி கேட்பாரற்று அன்று பட்டபகல் கொள்ளையடித்த பார்ப்பனர்கள் இன்று
புனிதர் வேடம் போடுகின்றனர்.
ஊழல் ஒழிப்பு என ஆடுகின்றனர்.

சில காவல் துறையினர் சில்லறைத்திருடர்களை கண்டும் காணாமல் இருப்பது போல இருப்பார்கள். கையூட்டு பெற்றுக்கொண்டு வளர்த்தும் விடுவார்கள்.ஆனால்.....
தங்களு்க்கு ஆபத்து வரும் நேரத்தில் ,
மக்களிடத்தில் அம்பலப்படும் நேரத்தில் சில்லரைத்திருடர்களை பிடறியில் அடித்து கைது செய்து வழக்கும் பதிந்து தங்களது நேர்மையை நிலைநாட்டுவார்கள்!
இதைப்போன்றதுதான்
உயர்சாதியினரின் ஊழல் ஒழிப்பு நாடகம்!

நம்மாட்கள் கரி திருடியவன்....
பார்ப்பனர்கள் ரயிலையே விழுங்கியவர்கள்!

இன்று, ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 
ஆனால்....
உத்தமதானபுரங்களும், சதுர்வேதிமங்கலங்களும்,
மடாதிபதிகளின் கணக்கற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமா?
பறிமுதல் செய்ய போராடுவார்களா ஊழல் ஒழிப்பு போராளிகள்?

இந்திய சமூக வரலாற்றை நுட்பமாக
ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளியாமல்
இது புரியாது.

நமக்காகவே இந்த சமூகத்தை
அலசி ஆராய்ந்து தங்களது சிந்தனைகளை
பல்லாயிரம் பக்கங்களில் செதுக்கி
வைத்திருப்பவர்கள்
#அம்பேத்கரும்_பெரியாரும்.

இவர்களது எழுத்துக்களை நான்கு பக்கமாவது வாசிக்காமல் இன்றைய இளைஞர்கள் எந்த போராட்டம் செய்தாலும்
அது பயனற்றதாகும்.
பார்ப்பனர்க்கே பயனளிப்பதாகும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள்!
                                                   #Viduthalaiarasu
- 19.2.17 முகநூல் பதிவு

சனி, 15 பிப்ரவரி, 2020

காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தஞ்சையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன், ஜம்புலிங்கம், கோவிந்தராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 2 பாண்டியர்கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: காளையார் கோவிலின் பழைமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என அழைக்கப் பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேரும் ஒன்று. அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களாலும், சுந்தரேஸ்வரர் கேவில், காளீஸ்வரர் கேவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பே ரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத அளவில் காளையார்கோவிலை அமைத்துள்ளார்.

கடைச்சங்க கால பாண்டிய மன்னன் விக்கிர பெருவழுதி, கானப்பேரெயிலை கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.

அங்குள்ள கண்மாயின் உள்பகுதியில் பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலை கட்டடம் பழுதடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த உடைந்த நிலையில் உள்ள துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

இதேபோன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. அதில் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திரு விடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும்படையை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கி.பி.1325இல் வந்த அரபு நாட்டு பயணி திமிஸ்கி என்பவர் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரை பதிவு செய்துள்ளார்.

நன்றி: தினகரன் (21.12.2019)

 -  விடுதலை ஞாயிறு மலர், 15.2.20

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...