திங்கள், 2 டிசம்பர், 2019

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்-4

ஆய்வுக்கட்டுரை

தொல்லியல் ஆய்வாளர் ச.தீபிகா

 

சோழர் காலக் கல்வெட்டுகள்

உத்திரமேரூர் குடவோலை முறை

சொல்லும் கல்வெட்டு

 

ராஜ ராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதை கூறும் கல்வெட்டு

தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர் காலக் கல்வெட்டுகள் ஆகும். சோழர் காலத்தில் 200 முதல் 300 கற்கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் பல கல்வெட்டுகள்பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் வேதியர்களுக்கும், போர் வீரர்களுக்கும், கோயில்களுக்கும் மன்னர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்அளித்த கொடைகளைப் பற்றியே குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகளில் வரலாற்றுச் செய்திகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை மிகக் குறைவே.

முன்பு கூறியதைப் போல சோழர்காலக் கல்வெட்டு ஒவ்வொன்றும் மங்களச் சொற்களைக் கூறிக்கொண்டே துவங்குகின்றது, அடுத்து அம்மனுக்குரிய வம்சாவளி செய்திகள் விளக்கப்படுகின்றன. இச்செய்திகளில் புராணங்களும் இதிகாசங்களும் கலந்து இருப்பதை நாம் காணலாம். தமிழ்க் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திகளில் மன்னர்களின் வெற்றி நிகழ்வுகளை பொறிக்கத் தொடங்கியது ராஜராஜ சோழனின் காலத்தில்தான்!

சோழர் காலக் கல்வெட்டுகள் வேதியர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களைப் பற்றிய செய்திகளை துல்லியமாக விளக்குகின்றன. அக்கிராமங்களில் வசிக்கும் வேதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், அவர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்ட செய்தியும் கோயில்சுவர் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேசப்படுகிறது. சோழர் காலத்தில் இருந்த 1300 கிராமங்களில், சுமார் 250 கிராமங்கள் பிரம்மதேய கிராமங்களாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் நில அளவை குறித்து மிகத்துல்லியமாக அளவுகோல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், தஞ்சை பெரியகோயில் எவ்வாறு வடிவமைத்து, உருவாக்கப்பெற்றது என்ற செய்தி கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

பெரும்பாலான வெளிநாட்டுச் சான்றுகளே சோழர்களுடைய வெளியுறவு, வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துரைக்கின்றன. அதற்கு சான்றாக ராஜராஜசோழன், சீன சாங் பேரரசுடன் தன் வெளிநாட்டு உறவை மேன்மைப்படுத்திய செய்தியை சீன நாட்டில் உள்ள சாங் பேரரசின் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் தாய்லாந்தின் சைலேந்திரப் பேரரசு மன்னர்களால், நாகப்பட்டினத்தில் அமைக்கப்பெற்ற சூடாமணி பௌத்த விகாரையைசோழ மன்னர்கள் போற்றி வளர்த்தனர் என்ற செய்தியை தென்கிழக்காசிய வரலாற்று ஆவணங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. சோழர்களின் சிறப்புமிக்க தென்கிழக்காசிய படையெடுப்பைக் கூறும் கல்வெட்டுகள், அவர்கள் எவ்வாறு கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர், அதற்கான வழிமுறைகளும் விளக்கங்களும் என்ன என்பன போன்ற விவரங்கள் எந்த கல்வெட்டிலும் இல்லை.

பல கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் ராஜகேசரி, பரகேசரி போன்ற பட்டங்களைத் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான கல்வெட்டுகளில் இப்பட்டங்களே காணப்படுகின்றன; மன்னனின் பெயர்கள் வருவது குறைவே.

முதல் பராந்தகனின் (கி.பி.917) உத்திரமேரூர் கல்வெட்டு ஓர் அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது.  உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் சபை ஒன்று இயங்கி வந்துள்ளது. அச்சபைக்கான அங்கத்தினர்களைத் தேர்வு செய்ய குடவோலை முறை செயல்பட்டது என்று இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர், பல்லவர் காலத்திலேயே (கி.பி.750) 1200 வேத வைஷ்ணவ வேதியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆகும். எனவே இது உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இது ஒரு வேதியர் குடியிருப்பாக  திகழ்ந்திருக்கிறது.

தமிழகக் கல்வெட்டுகளில் வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் முக்கியமான ஒன்று கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டாகும். சுந்தர சோழனின் தலைமகனும், முதலாம் ராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டது குறித்து இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்றும், வீரநாராயணசதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த சிலர் இக்கொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும், மன்னனின் ஆணையின் பெயரில் அவர்களிடமிருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் நிலங்களும், அரசு உரிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் இக்கல்வெட்டில் இருந்து அறிகிறோம்.

அகழாய்வுகளில் கிடைக்கும் செய்திகளை மெய்ப்பிக்க சில சமயங்களில் கல்வெட்டுகள் மிகவும் உதவுகின்றன. சான்றாக உறையூரில்அகழ்வாராய்ச்சியில் கி.பி. 9-10 நூற்றாண்டில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இதை மெய்ப்பிக்கும்விதமாக உறையூருக்கு அருகில் உள்ள அல்லூர் கோயிலில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய கல்வெட்டில் காவிரி வெள்ளத்தால் அல்லூர் கோயில்நிலங்கள் அழிந்தன என்று கூறப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலுக்கு 400 தளிச்சேரிப் பெண்களை பணிக்காக நியமித்தான் என்ற பெரிய கோயில் கல்வெட்டு  குறிப்பிடத்தக்க மற்றொரு கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் 400 பெண்களின் பெயர்களும், அவர்களுடைய ஊர் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  அது மட்டுமில்லாமல்,  கோயிலின் அருகே ஒவ்வொருவருக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் விளையும் நிலம் வழங்கப் பெற்றுள்ளது என்பன போன்ற செய்திகள் இக் கல்வெட்டுகளில்  மிக விளக்கமாகவும் தெளிவாகவும் பொறிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களைத் தவிர, அவர்களுக்கு முன்னர் ஆட்சி புரிந்த  பல்லவர்களின் கோயில்களையும் பேணி போற்றினர்  என்பதற்குச் சான்றாக பல சோழர் மன்னர்களின் கல்வெட்டுகள்  மகாபலிபுரத்தில்  உள்ள பல்லவர் கால  கடற்கரைக் கோயிலிலும், ஆதிவராக குடைவரை கோயிலிலும் கிடைக்கின்றன.  இக்கல்வெட்டுகளின் மூலம் பல்லவர்கள் சூட்டிய கோயில் பெயர்கள்  சோழர் காலத்திலும் அவ்வாறு வழக்கத்திலிருந்ததை  நாம் அறிய முடிகிறது. 

காலங்கள் செல்லச் செல்ல சோழர்களை அடுத்து பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்கர்களும் தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற கல்வெட்டுகளின் மூலம் செய்திகளைக் கொடுத்துச் சென்றுள்ளனர். இவற்றை ஆவணப்படுத்தும் பணிகளை இன்னும் பல அறிஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுவருகின்றனர். சங்ககாலம் முதல் சோழர் காலம் (சுமார் 1300 ஆண்டுகள்) வரையிலான தமிழகத்தின் கல்வெட்டுகளின் வரலாற்றை இதுவரை நாம் கண்டோம். அதற்குப் பிந்தைய காலக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன. மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் முறையாகப் படியெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பழங்காலக் கோயில்கள், மடங்கள், பயணியர் இளைப்பாறும் இடங்கள், குன்றுகள், மலைகள், பாறைகளில் நம் வரலாற்றுச் செய்திகள் பதிந்திருக்கின்றன. புதுப்பித்தல் என்ற பெயரில் அவற்றை அழித்துவிடாமல், மறைத்துவிடாமல் படியெடுத்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குண்டு.

(நிறைவு)

 - உண்மை இதழ் 16-31. 3. 19

ஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் - 3

ச.தீபிகா, தொல்லியல் ஆய்வாளர்

 

வட்டெழுத்துக் கல்வெட்டு

வரலாற்றை அறிவதற்கு மிகவும் துணை நிற்பவை தொல்லியல் சான்றுகளே ஆகும். அத்தகைய தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சங்ககால ‘தமிழி’ கல்வெட்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட பேரரசர்களின் கல்வெட்டு முறைகளை இக்கட்டுரையில் காணலாம்.

தமிழகத்தில் சங்க காலம் முடிவுற்ற பிறகு களப்பிரர்  ஆட்சிக் காலம் தொடங்கியது. சுமார் 300 ஆண்டுகளாக தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஆட்சிக் காலத்தைப் பற்றியும், களப்பிர மன்னர்களைப் பற்றியும் தொல்லியல் சான்றுகளோ, இலக்கியச் சான்றுகளோ நமக்கு அதிக அளவில் கிடைக்கவில்லை. இதனால் களப்பிரர் ஆட்சிக் காலம் வரலாற்று அறிஞர்களால் (தகவல்கள் இல்லாத காரணத்தால்) இருண்ட காலமாகவே கருதப்பட்டது. (இங்கு இருண்ட காலம் என்பதை மோசமான ஆட்சிக் காலம் என்பதாகக் கருதக் கூடாது.) ஆனால் தற்கால ஆராய்ச்சிகளில் களப்பிரர் கால இலக்கியங்களும், சான்றுகளும் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் வலுவிழக்க தொடங்கியது.  வட தமிழகத்தை பல்லவர்களும், தென் தமிழகத்தை பாண்டியர்களும் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து தான், பிற்காலச் சோழர்கள் தஞ்சை மற்றும் காவிரிக் கரைகளை கைப்பற்றி சோழப் பேரரசை தமிழகத்தில் மீண்டும் தொடங்கினர்.   

களப்பிரர் ஆட்சிக் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலானது. அச்சுத விக்கந்த மற்றும் சேந்தன் கூற்றன் ஆகிய மன்னர்களைத் தவிர எந்த மன்னர்களைப் பற்றியும் களப்பிரர் காலத்தில் நாம் அறிய முடியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்தப் புலவர் புத்ததத்தர் எழுதிய “வினயவிநிச்சயா” என்ற இலக்கிய நூலில் அச்சுத விக்கந்த பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த களப்பிரர் காலக் கல்வெட்டுகளின் மொழி தமிழாகவும், எழுத்து வடிவம் சங்க காலத் தமிழ் எழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்த வட்டெழுத்தாகவும் உள்ளது.

பூலாங்குறிச்சி களப்பிரர் கால கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான கல்வெட்டாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் ஒரு வரி முதல் ஆறு வரிகளை கொண்ட சிறிய கல்வெட்டாக இருக்கும். ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பல வரிகள் சிதைந்துள்ள போதிலும், அவை களப்பிரர் ஆட்சி நடந்த முறைகளைப் பற்றியும், சேந்தன் கூற்றன் என்ற அரசன் அமைத்த தேவகுலம் என்றழைக்கப்படும் கோயில்களின் வழிபாட்டு முறைகளையும், களப்பிரர்கள் வேதியர்களை ஆதரித்தனர் என்பதை விளக்குகிறது. பெரும்பாலான களப்பிரர் காலக் கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்குச் செய்து கொடுத்த படுக்கைகளைப் பற்றியே கூறுகிறது.  அதுமட்டுமில்லாமல் சுனை மற்றும் அணை போன்ற நீர் நிலைகளை சமணத்துறவிகளுக்கு அமைத்து கொடுத்ததைப் பற்றியும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இதற்கு சான்றாக ‘சித்தன்னவாசல்’, ‘ஈரெட்டிமலை’ கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

பல்லவ மண்டகப்பட்டுக் கல்வெட்டு

 

கோழிச் சண்டையை விளக்கும் அரசலாபுரம் கல்வெட்டு

அடுத்த முக்கியமான கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். இக் கல்வெட்டின் எழுத்து வடிவத்தைக் கொண்டு, தமிழிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் அடைந்ததை  நாம் அறிய முடிகிறது. அது மட்டுமில்லாமல் இசைக்குறிப்புகளுடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். ‘அரசலாபுரம்’ மற்றும் ‘இந்தளூர்’க் கல்வெட்டுகள் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற பண்பாட்டுச் சிறப்புமிக்க கோழிச் சண்டையை விளக்கும் முதல் கல்வெட்டாகும். ஒரு சுவையான செய்தியாக கோழியின் பெயர் பொற்கொற்றி என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிடைத்துள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு செய்து கொடுத்த கொடை பற்றி கூறுவதாக அமையப் பெற்றுள்ளன. ஆனால் ‘பறையன்பட்டு’ மற்றும் ‘திருநாதர்குன்று’ கல்வெட்டுகள் சமணத் துறவிகளின் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் கொள்கையைப் பற்றி விளக்குவதாக உள்ளது. ‘நெகனூர்பட்டி’ கல்வெட்டு சமணத் துறவிகளுக்குப் பெண்களும் சமணப் படுக்கைகளைக் கொடையாக அளித்தனர் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிடைக்கும் முக்கியமான பல்லவர் கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலான காலத்தவையாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு மிக முக்கியமான ஒன்றாகும். இக்கல்வெட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகவும், எழுத்து பல்லவ கிரந்த வடிவத்திலும் உள்ளது.  இக்கல்வெட்டில் “செங்கல், மரம், உலோகம், சுதை இவை  எதுவுமில்லாமல் திருமூர்த்தி தெய்வங்களுக்கு கல்லாலான கோயிலை எழுப்பினான்” என்று கூறப்பட்டுள்ளது. இக் காலம் தொட்டு, தமிழகத்தில் கல்வெட்டுகள் எழுதும் முறை முற்றிலும் மாற்றமடைகிறது.  பல்லவர்களின் சில குகைக் கல்வெட்டுகளைத் தவிர, பெரும்பாலான தமிழகத்தின் கல்வெட்டுகள் முகப்புரை, குறிப்புரை, முடிவுரை போன்ற அமைப்பிற்கு மாறத் தொடங்கின. பல்லவர் கல்வெட்டுகளில் முகப்புரையாக “திருஷ்டம்“ (பார்வையிடப்பட்டது) என்ற சொல்லே இருக்கும். இது போன்ற மங்கல வார்த்தைகளுடன் முகப்புரைகள் தொடங்கின. பிற்காலத்தில் இது போன்ற மங்கல சொற்களுக்குப் பதிலாக மங்கலக்குறிகள் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இன்னும் பல கல்வெட்டுகளில் இவைகளும் மாறி ஸ்லோகங்கள் இடம்பெறத் தொடங்கின. பெரும்பாலான இடைக்காலக் கல்வெட்டுகள் அனைத்தும் “ஸ்வஸ்திஸ்ரீ” என்ற மங்கல வாசகத்துடன் துவங்குகின்றன. மங்கலவாசகத்தைத் தொடர்ந்து அரசனின் பெயர் கல்வெட்டுகளில் இடம்பெறும். அடுத்ததாக அம் மன்னனின் வம்சாவழி மிக விரிவாகவும், விளக்கமாகவும் இடம்பெறும். பெரும்பாலும் மன்னர்களுடைய முன்னோர்கள் பற்றிய செய்திகள் கற்பனை நிரம்பிய குறிப்புகளாகவே கல்வெட்டுகளில் இருக்கும். அடுத்து கல்வெட்டுகளின் குறிப்புரையில் கொடைகளைப் பற்றிய மிக விளக்கமான குறிப்புகளைக் காணலாம்.  பெரும்பாலான கல்வெட்டுகள் கொடைகளைப் பற்றியனவே! பொதுவாக வேதியர்களுக்கும், கோயில்களுக்கும், போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் கொடை வழங்கப்படும். இவைகளைத் தவிர பல கல்வெட்டுகள் மன்னனுடைய  போர் வெற்றியை குறிப்பனவாகவும் உள்ளன. கல்வெட்டுகளின் முடிவுரையில் பெரும்பாலும் அரசு முத்திரைகள் இடம்பெறும். சில கல்வெட்டுகளில் கொடைக்கான தர்மத்தைப் பாதுகாப்போர் அடையும் பலனும், தர்மத்துக்கு இடையூறு செய்வோர் அடையும் கெடுபலனும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவ காலக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மன்னர்களுடைய பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணமும்,  அவர்கள் தாங்கள் கட்டின கோயில்களுக்கு அளித்த கொடையை குறிப்பவையாகவும் விளங்குகின்றன. பல்லவர் காலம் தொட்டு கல்வெட்டுகள் மன்னர்களுக்கும், மன்னனைச் சார்ந்த குடியினருக்கும் உரியதாக மட்டுமே விளங்க தொடங்கின. அதற்கு முன்பு எளிய மக்களும் கல்வெட்டுகளைப் பதித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.3.19

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...