வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திருப்பத்தூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்புதிருப்பத்தூர், ஏப்.12  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்கள், பழங்கால மண் உருவ பொம்மைகள் மற்றும் கற்கோடரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியது:

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உடையாமுத்தூர் கிராமம். இந்த ஊரில் ஏரிக்கரை ஓரத்தில் திறந்தவெளியில் பெரிய வேப்பமரத்தின் அடியில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. அவற்றை இந்த ஊர்மக்கள், வேடியப்பன் என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.

இந்த இரண்டு நடுகற்களும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகற்கள் ஆகும். அவை தலா 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. வலது கையில் நீண்ட கத்தியையும் இடது கையில் வில்லையும் கொண்டு காணப்படுகின்றன. இது, போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக அவர்களின் உருவத்தைக் கல்லில் செதுக்கி வழிபடும் பழமையான மரபாகும். இந்த நடுகற்களுக்கு எதிரில் இரண்டு பெரிய மண் குதிரைகள் உள்ளன.

இக்கோயிலுக்கு அருகில் நிலத்தை உழுதபோது ஏராளமான மண் பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தையும் இக்கோயிலுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். அவற்றை கெட்டியான மண்ணைக் கொண்டு உறுதியாகச் செய்துள்ளனர். ஆண், பெண், குதிரை, காளை மாடுகள் என ஏராளமான உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இம்மண் உருவங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பொம்மைகளின் கழுத்தில் மணிமாலைகளை மண்ணால் செய்து வைத்திருப்பது பழந்தமிழரின் கலைநுட்பத்தை வெளிப் படுத்துகிறது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சிறுகாட்டுப் பகுதியில் உருவம் இல்லாத கற்களையும் வேடியப்பன் என்று வணங்கு கின்றனர்.

இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சில கற் கோடரிகளும் காணப்படுகின்றன. இந்த இடத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும் என்றார் அவர்.

-  விடுதலை நாளேடு, 12.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...