வெள்ளி, 21 ஜூன், 2019

பர்கூர் அருகே 12ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன்17, பர்கூர் அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயனப்பள்ளி நாகமலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் மேற்கு பக்கத்தில், புதர்களுக்கிடையே ஓட்டுநர் பால்ராஜ் என்பவர் காண்பித்த இடத்தில், இரண்டு சதுர அடி உள்ள கல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இதனை வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கேயே படியெடுத்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சோழப்பேரரசின் மூன்றாம் குலோத்துங்கன் 21ஆவது ஆட்சி காலத்தில் ஆதிகை மான் விடுகாதழகிய பெருமாள் ஆண்ட காலத்தில்,

திருவெண்காட்டில் உடைய அம்பாளுக்கு மீனாண்டாள் மகள் தானம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.

இதன் மற்ற பகுதிகள் உடைந்து விட்டதால் இவை மட்டுமே தெரிய வருகிறது.

மேலும், கிருஷ்ணகிரி பகுதி சோழப்பேரரசின் கீழ் சிற்றரசனாகிய விடுகாதழகிய பெருமாள் என்ற அதியர் மரபைச் சேர்ந்தவர் (இவர் ராசராச அதியமானின் மகன்) இப்பகுதியை 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் சைவ மரபைக் கொண்டவர். மூன்றாம் குலோத்துங்கனின் 21ஆம் ஆட்சி காலமான கி.பி. 1199இல் எடுக்கப்பட்ட கல்வெட்டு இது. இதில், திருவெங்காடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவாரத்தில் குறிப்பிட்டுள்ள திருவெண்காடு என்ற சோழநாடு காவிரி வடகரை நாட்டில் அமைந்துள்ள கோயிலாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள மீனாண்டாள் மகள் பெரும் செல்வந்தராக இருந்திருக்கலாம். அவள் திருவெண்காட்டு அம்பாளுக்காக நில தானம் கொடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

புதரில் இருந்த இக்கல்வெட்டு பொதுமக்கள் பார்ப்பதற்காக கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்று கல்வெட்டுகளோ, பழங்கால சின்னங்கள், சிதிலமடைந்த கோயில்கள் இருப்பின் தெரிவிக்குமாறும் ஆய்வுக்குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 17.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...