அட அண்டப்புளுகே!
வாயில் சாக்கடையைத் தவிர வேறு எதுவும் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக தனிக்காட்டு ராஜாவாக இருக்கக்கூடிய பிஜேபி அம்பி ஒருவர். சேலம் பட்டிமன்றத்தில் ஓர் அண்டப்புளுகை - ஆகாசப் புளுகை அள்ளி விட்டாரே பார்க்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களை நுழையச் செய்தவர் மதுரை வைத்திய நாதய்யர்தானாம். தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோயிலில் நுழைவதற்கு எதிராக ஈ.வெ.ரா. இருந்தார் என்பதுதான் அந்த அம்பியின் ஆலாபனம்.
உண்மை என்னவென்றால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது என்ன? இதுபற்றி திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்பு -2 பக்கம் 274இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாடு காங்கிரஸ் கூடிய போது நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணய்யங்காரும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளாரே. அவர்தான் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். ஈ.வெ.ரா எதிர்த்தார் என்று வாய் நிறைய பொய் புழுக்களை தேக்கி அப்படியே பொலபொலவென்று கொட்டியுள்ளாரே!.
இந்த இடத்திலும் பார்ப்பனக்கூட்டத்திற்கு ரொம்பவே இனிக்கும் திருவாளர் இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) கொண்டு வந்து நிறுத்துவோம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் 8.7.1939 சனிக்கிழமை அன்று தாழ்த்தப்பட்ட வர்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு முதல் அமைச்சர் (கனம்) சி.இராஜகோபாலாச்சாரியார்.
“இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி யுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷ யத்தில் காங்கிரஸ்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் “இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இச்செய்தி 31.7.1939 நாளிட்ட ‘சுதேசமித்தரன்’ ஏட்டில் வெளிவந்தது. (விடுதலை, 1.8.1939) பாவம் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு தோல்வி மயம்தான்.
மதுரை ஏ.வைத்தியநாதய்யர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துச் சென்றார் என்று பிரச்சாரம் செய்கிறார்களே - சங்கதி என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு சில தாழ்த்தப்பட்ட தோழர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.
அதற்குக் கூட உதவி செய்தவர் நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ். நாயுடுதான். அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாவார். அவரது அனுமதியின் காரணமாகத் தான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக சில தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்ற வீராதி வீரர் தான் இந்த வைத்தியநாத அய்யர்.
இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதற்காகக் கோயில் கருவறையைப் பூட்டியும், மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவரும், கோயில் நிருவாக அதிகாரியான அந்த நீதிக்கட்சிக்காரர்தான்!
- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக