கீழடி, செப்.7 திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு பணிகளை நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற் கொண்டது.
தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணி தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப் பட்டுள்ளன.
இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜாடி உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம், உறைகிணறு ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது முருகேசன் என்பவரது நிலத்தில் மேலும், ஒரு உறைகிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றில் இதுவரை 2 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் தொல்பொருள்கள் இன்னும் உள்ளதா என்பதை கண்டறிய விரைவில் ஜிபிஆர் கருவி மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை செந்தமிழ் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கீழடிக்கு வந்து அங்கு நடைபெறும் அகழாய்வை பார்வையிட்டுச் சென்றனர்.
- விடுதலை நாளேடு, 7 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக