காஞ்சிபுரம், செப்.8 காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி, அய்யனார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத்தலைவர் க.பாலாஜி தலை மையில் ஆய்வாளர்கள் வடிவேலு மற்றும் கோகுல சூர்யா ஆகியோர் காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 7.9.2019 அன்று கள ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது கொற்றவை தேவிக்கு தனது சிரத்தை தானே பலிகொடுக்கும் அரகண்ட வீரன் சிற்பத்துடன் கூடிய கொற்றவை சிலையையும், மகளிர் வழிபடும் நிலையில் உள்ள அய்யனார் சிலையையும் கண்டறிந்தனர். இந்த சிலை குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி கூறியது: இக்கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை தேவி சிலை 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது.
8 கரங்களுடன் வலது புறம் பெரிய சூலாயுதம் காணப்படுகிறது. தலையில் மகுடமும், காதில் குழையும், கழுத்தில் அணிகலன்கள், கைககளில் வளையல்கள், கால்களில் சிலம்புடன் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறது. கொற்றவை தேவியின் இடது புறம் தன் தலையை தானே வாளால் வெட்டி பலி கொடுக்கும் அரகண்ட வீரன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.
இதே கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே உள்ள புளிய மரத்தடியில் கவனிப்பாரின்றிக் கிடந்த கல்லை ஆய்வு செய்தபோது அந்தக்கல்லில் அய்யனார் சிலை செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அய்யனார் சிலை 4 அடி அகலமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள ஐயனார் சிலையின் இருபுறங்களிலும் மகளிர் கையில் சாமரம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கின்றனர்.
ஐயனாரின் காலடியில் இரண்டு குதிரைகள் காணப்படுகின்றன என்றார். இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வுத் துறையின் தலைவரும், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி கூறியது: கண்டெடுக்கப்பட்ட இந்த ஐயனார் சிலையும், கொற்றவை சிலையும் 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது என்றார்.
- விடுதலை நாளேடு, 8 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக