சனி, 15 பிப்ரவரி, 2020

காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தஞ்சையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன், ஜம்புலிங்கம், கோவிந்தராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 2 பாண்டியர்கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: காளையார் கோவிலின் பழைமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என அழைக்கப் பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேரும் ஒன்று. அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களாலும், சுந்தரேஸ்வரர் கேவில், காளீஸ்வரர் கேவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பே ரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத அளவில் காளையார்கோவிலை அமைத்துள்ளார்.

கடைச்சங்க கால பாண்டிய மன்னன் விக்கிர பெருவழுதி, கானப்பேரெயிலை கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.

அங்குள்ள கண்மாயின் உள்பகுதியில் பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலை கட்டடம் பழுதடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த உடைந்த நிலையில் உள்ள துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

இதேபோன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. அதில் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திரு விடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும்படையை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கி.பி.1325இல் வந்த அரபு நாட்டு பயணி திமிஸ்கி என்பவர் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரை பதிவு செய்துள்ளார்.

நன்றி: தினகரன் (21.12.2019)

 -  விடுதலை ஞாயிறு மலர், 15.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...