நிவேதிதா லூயிஸ்
2019 அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சென்னை சி.ஆர்.பி. ஆர்ட் சென்டரில், தொல்லியல் அதிசயம் ஒன்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போவதாகவும், ஒளிப்படக் கலைஞருடன் ஊடக நண்பர்கள் நேரில் வரவேண்டும் என்றும் அம் மய்யத்தின் முத்திரை பதித்த லெட்டர் பேடில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தொல்லியல் அதிசயத்தை நமக்கு அறிமுகம் செய்துவைக்கப் போகின்றவர் என்று ‘வரலாற்று ஆய்வாளர்’ நந்திதா கிருஷ்ணாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது அந்தச் செய்தி. நந்திதா கிருஷ்ணா புளூ கிராஸ் அமைப்பை நடத்துபவர்; பீட்டா போன்ற அமைப்புகளுடன் நெருங்கிச் செயல்படுபவர், ‘இண்டாலஜிஸ்ட்’ என்று சங்கிகளால் போற்றப்படுபவர்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அரசியல் செய்து நீர்த்துப் போகச் செய்ததில் இவரது பெரும் பங்கும் உண்டு. “காளைகள் துன்புறுத்தப்படுகின்றன” என்று ஒரு பக்கம் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே, மறுபக்கம் தமிழக இளைஞர்களை கடலுக்கும் காவல்துறைக்கும் இடையே நிறுத்திய சிலருள் முக்கியமானவர். கடந்த மாதம் “இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு” என்னும் சரித்திர(!) முக்கியத்துவம் வாய்ந்த நூலை மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
செய்திக்குறிப்பு _ நேபாளத்தில் கிருஷ்ணரும் அர்ஜுனரும் தோன்றும் சுடுமண் வரைப்பட்டிகை (terracotta tablet) ஒன்று கிடைத்திருப்பதாகவும், ஆக்ஸ்போர்டு நிறுவன டி.எல். டேட்டிங்குக்கு (தெர்மோலூமினசன்ஸ் என்னும் வெப்ப ஒளிர்வுச் சோதனை) உட்படுத்திய பின் இதன் காலம் 1600_-300 பொ.ஆ. மு (கி.மு) என்று கணக்கிடப்பட்டுள்ளது என்றும் சொன்னது. அங்கே சென்ற ஊடக நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சி. 1600 முதல் 300 கி.மு. என்பது ‘பெயின்டட் கிரே வேர்’ என்று சொல்லப்படும் காலம். இது சிந்து சமவெளி காலத்துக்கும் கங்கை நதிக்கரை நாகரிகத்துக்கும் இடைப்பட்ட காலம். இந்த வரைப்பட்டிகையில் போருக்குப் பயன்படுத்தப்படும் அரைத் தேர் ஒன்றும், அதன் மேல் இரு வீரர்கள் நிற்பது போலவும் காட்சியமைப்பு உள்ளது. இதில் ஒரு வீரரின் கை நீண்டு எதையோ சுட்டிக்காட்டுவது போல உள்ளது. மற்ற வீரர் தன் இரு கைகளாலும் கடிவாளங்களைப் பற்றியிருக்கிறார். நான்கு குதிரைகள் அந்தத் தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன. வீரர்களின் தோள்களில் மொத்தம் இரண்டு அம்பறாத்தூணிகள் (quiver) காணப்படுகின்றன.
இந்தக் காட்சியமைப்பைக் கொண்டு. “வரைப்பட்டிகை கீதோபதேசம் காட்சியை விளக்குகிறது; அதில் உள்ள வீரர்கள் கிருஷ்ணரும் அர்ஜுனரும்தான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டால், உலகிலேயே முதல் கீதோபதேசக் காட்சி இதுதான் என்று நிறுவப்பட்டுவிடும்’’ என்று கூட்டத்தில் சொல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட வரைப் பட்டிகையை, தான் நேரில் கண்டதில்லை என்றும், புகைப்படத்தைக் கொண்டே அது கீதோபதேசம் என்று, தான் ‘கணிப்பதாகவும்‘ வரலாற்று ஆய்வாளர் நந்திதா கிருஷ்ணா கூறியுள்ளார். நேபாள நாட்டின் சந்தை ஒன்றில் இந்த வரைப்பட்டிகை வாங்கப்பட்டது எனவும், ஹாங்காங்கைச் சேர்ந்த பழம்பொருள் சேகரிப்பாளரான ஜெரெமி பைன் வசம் இந்த வரைப்பட்டிகை தற்போது உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதுவரை இப்படியொரு தொல்லியல் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்குமா என்பது ஆச்சரியமே!
சரி, இருக்கட்டும். நமக்குச் சில கேள்விகள் இருக்கின்றன.
1. இது கீதோபதேசக் காட்சி என்பதற்கும், இதிலுள்ள வீரர்கள் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் என்பதற்கு சான்று எங்கே உள்ளது?
2. மகாபாரதம் _ கதை என்பது உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். ஆனால், கதையில் நடந்தவற்றை வரலாறு என்று திணிப்பதன் நோக்கம் என்ன?
3. கிருஷ்ணன் தேரோட்டி என்றால் அவன் தோளில் எதற்கு அம்புக்கூடு?
4. அர்ஜுனன் தோளில் அம்புக்கூடு இருந்தால், அதிலும் இரண்டு பக்கமும் அம்புக்கூடு இருந்தால், வில் எங்கே?
5. இரு தோள்களிலும் அம்பறாத்தூணி ஏந்திய அர்ஜுனன் ஏன் தேர் ஓட்ட வேண்டும்?
6. வாய் வழியாக சொல்லப்பட்டு வந்த பாரதக் கதைகளின் மூலமே பொ.ஆ. மு. 400 தான் என்று பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பாரதக் கதைகளின் எழுத்து வடிவம் பொ.ஆ.8-9ஆம் நூற்றாண்டில்தான் என்பதும் உலகம் ஒப்புக் கொள்ளும் உண்மை. அப்படி என்றால் இந்த வரைப் பட்டிகையின் காலம் கீதோபதேசத்தை எப்படி பொ.ஆ. மு. 1000 என்று பின்னுக்கு தள்ள முடியும்? இந்தப் பட்டிகையில் இருப்பவர்களை அர்ஜுனன் என்றும் கிருஷ்ணன் என்றும் எதைக் கொண்டு சொல்ல முடியும்?
7. இந்த வரைப்பட்டிகை கிடைத்த இடம் எது? அந்தத் தொல்லியல் களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்னென்ன? இதனுடன் கிடைத்த பொருள்கள் என்ன? எந்த அடுக்கில் (stratigraphy) இது கிடைத்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், நேபாளத்தில் ஒரு கடையில் வாங்கியதாகச் சொல்லும் மண் பலகைக்கு தொல்லியல் முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்ல முடியாது. இது பொய்யான ஜோடனையாகத்தானே இருக்க முடியும்?
8. இந்த டி.எல். டேட்டிங் முறையை அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், இதே முறையில் ஆதிச்சநல்லூர் பானை ஓடுகளை தொல்லியல் அறிஞர்கள் சசிசேகரன் மற்றும் ராஜவேலு குழுவினர் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இதே டி.எல்.டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தி அதன் தொன்மை 3000 ஆண்டுகள் +/_- 700 ஆண்டுகள் என்று சொல்வதையும் நீங்கள் சரி என்று ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். அதன் படி பொருநை நாகரிகம் 3700 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்!
9. இறுதியாக “ஒரே ஒரு சாம்பிளைக் கையில் வைத்துக் கொண்டு தொல்லியல் தொன்மையை நிரூபிக்க முடியாது” என்கிற கருத்தின்படி, எப்படி பொருந்தலில் ஒற்றை ஆவணத்தைக் கொண்டு தமிழின் தொன்மையை பொ.ஆ. மு.490 என்று ஒப்புக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்டதோ, அதே போல, இந்த ஒற்றை மாதிரியை வைத்து கீதோபதேசம் கதை 1500-600 பொது ஆண்டுக்கு முன் சொல்லப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்புறம் கீழடி என்னும் ஒன்றை, தமிழன் கையில் எடுத்துக்கொண்டு தமிழின் தொன்மையை நிரூபித்து விட்டான் என்பதற்காக, இரு போர் வீரர்கள் போருக்கு விரையும் காட்சியை கீதோபதேசம் என்று கதை சொல்லி தமிழன் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம். நாங்கள் விழித்துக் கொண்டு வெகுகாலமாகிவிட்டது! அய்யா பி.ஏ.கிருஷ்ணன் இதற்கு எதிர்வினையாக ஆற்றப் போகும் “அறிவியல்” சார்ந்த அல்லது “அகவெளி” சார்ந்த ஆய்வுக் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்!
# வரலாற்றைத் தோண்ட வேண்டும். மார்க்கெட்டில் வாங்கக்கூடாது!
# குதிரையே இல்லாத சிந்துசமவெளியில் எங்கிருந்து வந்த தேர் இது???
_ (கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர், தொல்லியல் ஆர்வலர், எழுத்தாளர்)
கடையில் வாங்கப்பட்டதாக ஒரு சுடுமண் வரைபட்கையைக் காட்டி, “மகாபாரதம் 3600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது. எனவே, அது ஆரிய நாகரிகம்“ என்று மோசடியாய் முடிவுகளை வெளியிட்ட நந்திதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களே அவரின் மோசடியை வெளிப்படுத்தின.
கேள்வி: மகாபாரத யுத்தம் நடந்ததாகச் சொல்லப்படும் குருட்சேத்திரத்தில் நடந்த அகழாய்வில் மிகப் பழமையான படிநிலையே கி.மு. 1000 என நிர்ணயிக்கப்படுகிறது. ஆக, மகாபாரதம் நடந்ததாகக் வைத்துக்கொண்டாலும் அதன் பழமை 3,000 ஆண்டுகள்தான். ஆனால், அந்தக் கதையைச் சொல்லும் வரை பட்டிகை எப்படி 3600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்?
பதில்: சரி, 3600 ஆண்டு பழையது என்பதற்குப் பதிலாக 3,000 ஆண்டு பழமைன்னு வச்சுக்கலாம்.
கேள்வி: ஹரப்பா காலகட்டத்தில் குதிரை இல்லை என்றுதான் இப்போதுவரை சொல்லப்படுகிறது. நீங்கள் குதிரை இருப்பதாகச் சொல்கிறீர்களே?
பதில்:. ஆமாம். வட இந்தியாவில் இந்தக் கண்டுபிடிப்பைச் சொல்லி யிருந்தால், எவ்வளவு கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?
கேள்வி: அப்படியானால், ஹரப்பா நாகரிகம் வேத கால, மகாபாரத நாகரிகமா?
பதில். இந்த வரைபட்டிகையைப் பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது?
கேள்வி: இந்த வரை பட்டிகை எங்கே தோண்டியெடுக்கப்பட்டது? அகழ்வாராய்ச்சியாளர் யார்? எந்த ஆழத்தில் எடுக்கப்பட்டது?
பதில்: இல்லைங்க. இதை, கடையில் வாங்கினோம். ஜெரெமி பைன்னு ஒரு ‘ஆர்ட் செல்லர்’ இருக்காரு. அவர் நேபாளத்தில ஒரு கடையில வாங்கியிருக்காரு. ஆனால், நாலு மாசமாக ஆராய்ச்சி பண்ணித்தான் இதைச் சொல்றோம்.
கேள்வி:. எப்படி ஆராய்ச்சி பண்ணீங்க.. அந்த வரை பட்டிகை உங்களிடம் இருக்கா?
பதில்: இல்லை. அந்த இமேஜை வச்சு ஆராய்ச்சி செய்தோம்.
- உண்மை இதழ், 1-15.11.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக