தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது.
இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு களின் முடிவுகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
இதற்குப் பிறகு, இது தொடர்பான காட் சிப் பதிவு ஒன்றும், சிறு வெளியீடு ஒன்றும் வெளியானது. 2015ஆம் ஆண்டிலிருந்து மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்பட்ட மிகப் பெரிய கட்டடத் தொகுதிகள், தமிழ்நாட்டில் தொல்லியல் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தின. கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய இந்தியத் தொல்லியல் துறை, அதற்குப் பிறகு அங்கு ஆய்வுகளை நடத்த விரும்பவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை அங்கு ஆய்வு களை நடத்த ஆரம்பித்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டிலிருந்து அங்கு தொடர்ச்சி யாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதி கள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரீகம் இருந் ததை உறுதிசெய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் பொதுவான கருதுகோளாக இருந்தது வந்தது. அதேபோல, பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ்நாட்டிற்கு அந்த எழுத் துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்து களை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் 'தமிழி' பரவலாக எழுதப் பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின.இங்கு கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு களை 'ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோ மெட்ரி' முறையில் பகுப்பாய்வு செய்த போது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரிய வந்திருப்பதாக தொல்லியல் துறை தெரி வித்துள்ளது.
கருப்பும் சிவப்பும் கொண்ட பானை
கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சம வெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன் றவை கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க் கும்போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந் திருக்கக்கூடும் என்றும், இந்தியாவுடனும் இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு களை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரிய வருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வு செய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மவுரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம்.
அதேபோல, கீழடியிலும் கொற்கையி லும் கிடைத்த கறுப்பு சிவப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும், கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக் கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந் ததை உறுதிசெய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கீழடியில் கிடைத்த கரிமப் பொருட் களின் மீது ஏற்கெனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரியவந்துள்ளதாகவும் தற் போதைய அகழாய்வில் கிடைத்த பொருட் களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது.
ஆதிச்சநல்லூர் வாழ்விட ஆய்வு
ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இதுவரை பறம்பு (Burial Ground) பகுதி யில் மட்டும் நடைபெற்றுள்ளதால், முதுமக் கள் தாழிகள் பற்றியும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் பற்றி மட்டுமே அறிய முடிந்தது. அம்மக்களின் வாழ்விடப் பகுதி, வாழ்வியல் நடைமுறைகள் பற்றி ஏதும் தெரியவில்லை. அதற்கு விடைகாணும் நோக்கத்தில் ஆதிச்சநல்லூரின் வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடங்களில் இந்த முறை மாநில தொல்லியல் துறை அகழாய் வுகளை நடத்தியது.
இங்கு நடந்த அகழாய்வில் இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலம் என இரண்டு காலகட்ட வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கற்கருவிகள் கிடைத் திருப்பதன் மூலம் இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரும் புக் காலத்தைப் பொறுத்தவரை, முதுமக்கள் தாழிகளும் அதனோடு கூடிய ஈமப் பொருட்களும் கிடைத்திருப்பதை வைத்து உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வைப் பொறுத்தவரை, 847 தொல்பொருட்களும் பல்வேறு வகையான பழங்கால மட்பாண் டங்கள் பெரும் எண்ணிக்கையிலும் கிடைத்தன. முதல் முறையாக, தமிழி எழுத் துக்களைக் கொண்ட பானை ஓடுகள் தற் போதைய அகழாய்வுகளில் கிடைத்துள் ளன. மேலும், குறியீடுகள் (graffiti) கொண்ட பானை ஓடுகள் 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள்
மிகத் தரமான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகள் வாழ் விடப்பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும், வெள்ளை நிற புள்ளிகள் இட்ட கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், கிண்ணங்கள் போன்ற பாத்திரங்கள் வாழ்விடப் பகுதி களில் கிடைத்துள்ளன.
மேலும், செம்பு மற்றும் இரும்பிலான மோதிரங்கள், கண்ணாடி மணிகள், தந்தத் தினால் ஆன மணிகள், அரிய கல் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், எலும்பு மணிகள், சுடுமண் மணிகள், வளையல்கள் ஆகியவை பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் அணிகலன்கள் குறித்த செய்திகளைத் தருகின்றன.
கருவிகள் செய்யும் கற்கள்
வீடுகளின் களிமண் தரையைத் தேய்க்க உதவும் கற்கள், அரவைக் கற்கள், கருவி களைத் தீட்டும் கற்கள் என வீடுகளில் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்களும் இந்த அகழாய்வில் கிடைத் துள்ளன. சுடுமண்ணால் ஆன மனித மற் றும் பறவைகளின் உருவங்களும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், 21 சுடுமண்ணாலான குழாய்கள் கிடைமட்டத்தில் பொருத்தப்பட்ட நிலை யில் கண்டுபிடிக்கப்பட்டன. இது கழிவு நீரை வெளியேற்றுவதற்கு வீடுகளில் அமைக்கப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
சிவகளை அகழாய்வு பாய்ச்சும் வெளிச்சம்
சிவகளை என்ற இடம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில், தூத்துக்குடியி லிருந்து 31 கி.மீ. தொலைவிலும் சிறீவை குண்டத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
சிவகளையில் நடந்த முதற்கட்ட அகழ் வாய்வில் 'ஆதன்' என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு கிடைத்தது. ஆதிச்சநல்லூரைப்போல செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத் தினால் ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடு வைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரையப் பெற் றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
இதனை வைத்துப் பார்க்கும்போது இரும்புக் காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் மேன்மை குறித்து தெரியவருகிறது. மேலும், இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல் லினை கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இதன் காலம் கி.மு. 1,155 என கால வரையறை செய்யப்பட்டுள்ளதாக மாநில தொல்லியல் துறை கூறுகிறது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த உயர் ரகமான வெண்கல, தங்கப் பொருட்களும் சடங்குகளுக்குரிய பொருட்களும் அங்கு ஒரு உயர் ரகமான சமூக, பொருளாதார வாழ்க்கை இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துவதாக தொல்லியல் துறை கூறுகிறது.
பழந்தமிழர் துறைமுகமா கொற்கை?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அமைந்திருக்கிறது கொற்கை. பாண்டிய நாட்டின் தலைநகராகவும் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கிய கொற்கையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1968-1969ஆம் ஆண்டு ஓர் அகழாய்வை மேற்கொண்டது. அந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத் துண்டு ஒன்றை பகுப்பாய்விற்கு உட்படுத்தியபோது அதன் காலம் கி.மு. 785 எனத் தெரியவந்தது.
கொற்கையில் கிடைத்த சங்குகள் அங்கு சங்கு அறுக்கும் தொழில் நடந்ததை சுட்டிக்காட்டுகின்றன.
கொற்கையில் மீண்டும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சங்கு வளையல்கள் தயாரிக்கும் தொழில் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த முழுமையான சங்குகள், பாதி அறுத்த நிலையில் உள்ள சங்குகள், முழுவதும் உடைந்த சங்கு வளையல்கள் போன்றவற்றை வைத்து இந்த முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.
வடிகட்டும் குழாய்
மேலும், சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. இச்செங்கல் கட்டுமானம் 29 அடுக்குகளு டன் 2.35 மீட்டர் உயரத்தைக் கொண்டுள் ளது. இக்கட்டுமானத்தின் நடுவே பெரிய கொள்கலன் ஒன்றும் கிடைத்துள்ளது. தரைத் தளத்தில் சுக்கான் பாறைக் கற்களை அடுக்கி, அதன் மீது மணல் பரப்பி, அதன் மேல் செங்கல் கட்டுமானம் எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கு அருகிலேயே துளைக ளுடன் கூடிய 9 அடுக்குகளைக் கொண்ட வடிகட்டும் குழாய் ஒன்றும் வெளிப்பட்டு உள்ளது.
இதனருகே மேற்கத்திய நாட்டு பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. நீண்ட நெடுங் காலமாகத் தமிழ்நாடு பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தது என்பதையே இந்த பொருட்கள் சுட்டிக் காட்டுவதாக தொல்லியல் துறை கூறுகிறது. மேலும் இந்த அகழாய்வில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கங்கைச் சமவெளியைச் சேர்ந்த கருப்பு வண்ணப் பூச்சு பெற்ற (Black Slipped ware of Gangetic valley) பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் இங்கு கிடைத்துள்ள வெள்ளி முத்திரைக் காசுகள், வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிறப் பானை ஓடுகள் (Northern Black Polished ware), கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணப் பூச்சு பெற்றுள்ள பானை ஓடுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்தியா கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியா வின் பல்வேறு பகுதிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகக் கருதலாம் என இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி, இந்து பனராஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திர நாத் சிங் ஆகியோர் கூறுவதாக தமிழ்நாடு தொல்லியல் துறை கூறுகிறது.
மேலும், இப்பகுதியைச் சுற்றி அதிக அளவிலான தொல்லியல் இடங்கள் காணப் படுவதால், கொற்கை துறைமுகம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே நிறுவப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வு
மயிலாடும்பாறையிலும் அருகில் உள்ள வரதனபள்ளி மற்றும் கப்பலவாடியில் கிடைத்த தரவுகளின்படி பார்த்தால், நான் காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு விவசாயம் நடந்திருப்பது தெரிய வந்திருப் பதாக தொல்லியல் துறை கூறுகிறது.
முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, ஊடகங்களிடம் பேசிய தொழில்துறை மற் றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் தொன்மையை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்தார்.
"மதுரை மாங்குளத்தில் கிடைத்த கல் வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் பாண்டியன் நெடுஞ்செழி யனின் பெயர் இருந்தது. அதற்கு முன்பு வரை, தமிழனின் வரலாறு இலக்கியம் சார்ந் தது என்பதாக மட்டும் குறிப்பிடப்பட்டது. மாங்குளம் கல்வெட்டுக்குப் பிறகுதான், இது தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்தப் பட்டது. புலிமான்கொம்பையில் கிடைத்த கல்வெட்டிற்குப் பிறகு, இது மேலும் உறுதி யானது.
கொற்கையில் கிடைத்த இந்த செங்கல் கட்டுமானம் 29 அடுக்குகளுடன் 2.35 மீட் டர் உயரத்தைக் கொண்டுள்ளது.
இப்போது சிவகளையிலும் கீழடியிலும் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன் என்ற பெயர் கிடைத்திருக்கிறது.
தமிழனுக்கு வரிவடிவம் கிடையாது. தமிழி என்று அழைக்கப்படும் தமிழ் பிராமி, அசோகனுக்குப் பிறகுதான் வந்தது என்ற கருதுகோளை முறியடித்து, அதற்கு முன்பே நம்மிடம் நாகரீகம் இருந்தது, எழுத்தறிவு இருந்தது என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன" என்று குறிப்பிட்டார்.
இந்த அகழாய்வு முயற்சிகளில் மும் பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறு வனம், பெங்களூருவிலுள்ள இந்திய அறி வியல் நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வுத் துறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை யுணர்வு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து மாநில தொல்லியல் துறை ஈடுபட்டது.
இந்த அகழாய்வின்போது, தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு (Ground Penetrating Radar), காந்த அளவியல் மதிப்பாய்வு (Magnetometer Survey), ஆளில்லா வான்வழி ஊர்தி மதிப்பாய்வு (Unmanned Aerial Vehicle) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி, தொல்லியல் இடங்களை அடை யாளம் காண்பது, அதற்குப் பிறகு அங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வது என தொல்லியல் துறை செயல்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக