மானாமதுரை,நவ.8- மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக் கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில சிற்பங்கள் கண்டடெடுக் கப்பட்டன. அவை ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சமண மத தீர்த் தங்கரரான மகாவீரர் சிற்பங்கள் என்று தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இங்கு இரண்டு மகாவீரர் சிற்பங்கள் இருக்கின்றன. ஒரு சிற்பம் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது சமணர்களின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமாகும். சிற்பத்தின் அடிப்பகுதியில் மகாவீரருக்கே உரிய சிம்மம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் மூன்று சிம்மங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இந்த பகுதி முற்கால பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியாகும். இந்த பகுதியில் சமண சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது அக்கால மன்னர்கள் மத நல்லிணக்கத்தை பேணியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மற்றொரு சிற்பம் தலைப்பகுதி சிதைந்தும் அதற்கு மேல் உள்ள பகுதிகள் முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்திற்கு இடது வலது புறமாக இரண்டு சாமரதாரிகள் தலை இன்றி காணப்படுகிறார்கள். இந்த சிற்பத்தின் காலம் 9ஆம் நூற்றாண்டு ஆகும். பாண்டிய நாட்டில் சமண சமயம் மிக செழிப்பாக இருந்ததற்கு தொடர்ந்து கிடைத்துவரும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாகும். தற்போது இப்பகுதி மக்கள் புத்தர் சுவாமி என்று விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்’’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக