வியாழன், 30 மே, 2019

கோட்சே தீவிரவாதியே!

தீவிரவாதி! தீவிரவாதி!! தீவிரவாதியே!!!



கலி.பூங்குன்றன்


(1) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியது என்ன?

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து - அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். (பள்ளப்பட்டியில், 12.5.2019)

(2) அவர் கூறியதில் என்ன குற்றம்?

நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பார்ப்பனர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது உண்மையே! அவன் இந்து என்பதும் உண்மை. அவன் இந்துத் தீவிரவாதியாக இருந்ததால்தான் காந்தியாரை சுட்டுக் கொன்றான் என்பது அதைவிடப் பெரிய உண்மையே! இதில் குற்றம் கூற என்ன இருக்கிறது?

(3) கமல்ஹாசன்தான் இப்படி முதன் முதலாகக் கூறியிருக்கிறாரா?

இல்லை. இல்லவே இல்லை. காந்தியார் கொலை செய்யப்பட்டபோது ‘தி-கார்டியன்’ (The Guardian) என்ற லண்டன் ஏடு கொடுத்த தலைப்பு என்ன தெரியுமா?

Delhi January 30 - Mahatma Gandhi was shot and killed this evening by a Hindu Fanatic இதுதான் அந்தச் செய்தி.

இதன் பொருள் என்ன?

மகாத்மா காந்தி இந்து தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தானே இதன் பொருள்! அதைத்தானே கமல்ஹாச னும் கூறியிருக்கிறார். அவர் சொன்னது ஒன்றும் புதியதல்லவே!

(4) காந்தியாரைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டியது யார்? - எது?

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நீதிமன்றத்தில் கூறிய வாசகங்களே - அவனைக் கொலை செய்யத் தூண்டியது எது என்பதற்கான ஆழமான - விடையாகும்.

காந்தியார் பேசி வரும் இந்த அகிம்சை வாதம். இந்து சமுகத்தினரை நிராயுதபாணி ஆக்கக் கூடியதே! முஸ்லிம் சமுகத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும் சக்தி இந்துக்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறானே கோட்சே. இதன் பொருள் என்ன?

தன்னை சனாதன இந்து என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளும் காந்தி யாரை - இந்துக்களைக் காப்பாற்றுவதற்காக அவரைக் கொன்றதாகக் கூறுவது இந்து வெறி அல்லாமல் வேறு என்னவாம்? அவரைக் கொன்றதற்குப் பின்புலத்தில் இருக்கும் தத்துவம் ‘இந்து’ மத வெறி தானே!

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்வா அவர்களால் 1963ஆம் ஆண்டில் எழுதப்பட்ட“The Murder of Mahatma”  என்ற நூல் (பக்கம் 274) என்ன கூறுகிறது?

“கோட்சே பகவத் கீதையைப் படித் திருந்தார். அதன் பெரும்பாலான சுலோ கங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய்யப்படுகின்ற வன்செயல்களை நியா யப்படுத்துவதற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளதே!

கீதை இந்து மத நூல் இல்லை என்று சொல்லப் போகிறார்களா? கோட்சேவைத் தூண்டியது இந்து மத நூல் என்பது - கோட்சேயின் வாக்கு மூலமே வலுவாகச் சொன்னபின் அவன் இந்து வெறியன் - கொலைகாரன் என்று கூறுவதில் என்ன பிழை?

அதே நூலில் இன்னொரு இடத்தில கூறுவதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

His Main Theme However was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures. He made moving references to historical events and delivered an impassioned appeal to Hindus to hold and preserve their motherland and fight for it with their very lives. He ended his peroration on a high note of emotion, reciting verses from Bhagawadgita.”

“இந்த மதச் சாத்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்து கொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை - தர்மம் ஆகும் என்பதே (கோட்சே அளித்த வாககு மூலத்தின்) அடிப்படையாக இருந்தது. உள் ளத்தைத் தொடும் வகையில் வரலாற்றுச் சான்றுகளை அவர் மேற்கோளாக எடுத்துக் காட்டினார். தாய்நாட்டைக் காக்க வேண் டும், தாயகத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து போர்க்களத்தில் நான் போரிட்டு உயிர்களைக் கொல்ல வேண்டுமா என்று கிருஷ்ணனிடம் அர்ச் சுனன் கேட்க, அந்தக் கேள்விக்கு கிருஷ் ணன் அளித்த பதில்களில் சிலவற்றைக் கூறி உணர்ச்சிகரமாகத் தனது உரையை முடித்தார்.”

நீதிமன்றத்தில் கோட்சேயின் வாக்கு மூலம் -  இந்து மதத்தில் அவன் கொண்ட வெறிதான் அவனைத் தூண்டுகிறது என்பது வெளிப்படை.

“மனித குலத்தின் நன்மையைக்கருதியே அந்தச் செயலை நான் செய்ய நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழி வைத் தருகின்ற கொள்கையைக் கொண்டி ருந்த ஒருவரைத்தான் (காந்தியை) துப்பாக் கியால் நான் சுட்டேன்” என்கிறானே.

இந்து மதம்தான் அவனைத் தூண்டியது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? அப்படி இருக்கும்போது கோட்சேயை இந்து தீவிரவாதி என்பதில் என்ன தவறு?

(5) இந்து மதமே அடிப்படையில் வன்முறையைத் தூண்டக் கூடியதா?

ஆம், அதிலென்ன அய்யப்பாடு? இந்து மதக் கடவுள்களே சண்டைப் போட்டிருக் கின்றனவே - கொலை செய்திருக்கின் றனவே - கற்பழித்து இருக்கின்றனவே -

மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன், சூத்திரன் சம்புகன் தவமிருந்தான்; அதனால் வருண தருமம் கெட்டுவிட்டது என்று கூறி, வாளால் அவனை வெட்டிக் கொல்லவில் லையா?

கிருஷ்ண அவதாரம் என்ன சொல்லு கிறது? தன் சொந்த பந்தங்களைக் கூடத் தாட்சண்யமின்றி கொல்லு, அதுதான் யுத்த தர்மம் என்று அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறவில்லையா?

நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனைக் கொலை செய்யவில்லையா?

நல்லாட்சி புரிந்து வந்த மாவலி சக்ரவர்த் தியை மூன்றடி மண் கேட்டு சூழ்ச்சியால் தலையில் கால் வைத்து வாமன அவதாரத் தால் கொன்றவன் தானே மகாவிஷ்ணு.

பரசுராமன் அவதாரம் என்பதே கொலை செய்வதற்குத்தானே!

இந்த நிலையில் உள்ள ஒரு கொலைகார மதமாக இந்து மதம் இருக்கும்போது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு கோட்சேயை மட்டும் தீவிரவாதி என்று சொன்னால் போதுமா? அடிப்படையாகவே  பயங்கரவாதம், தீவிர வாதம் எல்லாம் பொருந்தக் கூடியது தான் இந்து மதம்.

வருண தருமப்படி நடக்கவில்லையானால், ஆயுதம் எடுத்துப் பிராமணன் போ£ரிட வேண்டும் என்கிறதே மனுதர்மம்  (அத்தியாம் 8, சுலோகம் 348)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரை யும் கொல்லுதல் பாதகமாகாது (மனுதர்மம் அத்தியாம் 11, சுலோகம் 65)

பிராமணர்களுக்காகவே - உருவாக்கப் பட்ட மதம் தான் இந்து மதம் என்பது இன்னும் புரியவில்லையா?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்,


மந்த்ரா தீனம் து தெய்வதம்


தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்


தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெய


இது ரிக் வேதம்.


(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)


உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட் டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது, மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என் பதுதான் இந்த ரிக் வேத சுலோகத் தின் பொருள்.

இது அடிப்படைவாதம் அல்லவா?

நீதிமன்ற வாக்குமூலத்தில் நான் பிராமணன் என்று நாதுராம் கோட்சே குரலை உயர்த்திக் கூறியதன் பொருள் இப்பொழுது விளங்குகிறதா?

இந்த நிலையில் கோட்சே இந்துத் தீவிரவாதி என்று சொன்னது மிக மிக சாதாரணமானதே - அதற்கு ஊற்றுக்கண் அவன் நம்புகிற, மதிக்கிற, துதிக்கிற இந்து மதமே! இந்து மதமேதான்!

(6) கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று கதைக்கிறார்களே?

இது உண்மையல்ல என்பதற்கு ஆதா ரத்தை வேறு எங்கும் சென்று தேட வேண்டாம். காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே கொடுத்த பேட்டியே போது மானது.



இவர்கள் பாசிஸ்டுகள் இல்லையா?

குருஜி கோல்வால்கர் ‘வரையறுக்கப்பட்ட நமது தேசியம்’ (We or Our Nationhood Defined) என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக்கூடாது; அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழவேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்” என்கிறார் குருஜி.

இந்துக்கள் அல்லாதவர்கள் குடிமக்கள் உரிமையும் இன்றி வாழவேண்டுமாம்.

இப்படிப் பேசுகின்ற கும்பலுக்குத் தான் வரலாற்றில் பாசிஸ்டுகள் என்று பெயர்.

“சகோதரர்கள் அனைவரும் ஆர். எஸ்.எஸில் இருந்தோம். நாதுராம், தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல. ஆர்.எஸ்.எஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸை விட்டு வெளி யேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கோட்சே கூறியிருந்தார். ஏனெனில் காந்தியின் படுகொலைக் குப் பிறகு கோல்வால்கர் மற்றும் ஆர்.எஸ்.எசுக்கு சிக்கல்கள் ஏற்பட் டதால் அவர்களைக் காப்பாற்றுவதற் காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை.” (ஆதா ரம்: 1994 ஜனவரி 28 நாளிட்ட ‘ஃப்ரண்ட் லைன்’ இதழ்)

நாதுராம் கோட்சேயுடனான தொடர்பை எல்.கே.அத்வானி மறுத்தது பற்றி அதே பேட்டியில் கோபால் கோட்சே சொன்னது என்ன?

“அத்வானி கோழைத்தனமாகப் பேசுகிறார். சென்று காந்தியைக் கொன்று விட்டுவா என்று நாதுராமுக்கு ஆர்.எஸ். எஸ். உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?” என்று பதிலடி கொடுத்தார்.

இதுவும் போதாது என்றால் ஆர்.எஸ். எஸின் அதிகாரப்பூர்வமற்ற நாளேடான ‘தினமலரை’ சாட்சிக் கூண்டில் ஏற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?

“நாதுராம் கோட்சேயின் அருமைத் தம்பி ஆர்.எஸ்எஸின் தாய்மை இயக்கமான இந்து மகா சபையின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் பேட்டியளித்த போது ஆர்.எஸ்.எஸ். தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்றால் தன் வாழ்நாள் முழுதும் - அதில் முழு மூச்சாக இருக்க வேண்டும். இதற்கு எனது அண் ணன் நாதுராம் கோட்சேவை உதாரணமா கக் கூறலாம் என்று கூறியுள்ளார்” (‘தின மலர்’, 14.2.1988 திருச்சி பதிப்பு). இதற்கு என்ன பதில்?

மொரார்ஜி தேசாய் என்ன சொல்லு கிறார்?

காந்தியாரின் படுகொலையைப் பற்றி அன்றைய பம்பாய் பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது சுய சரிதையில் எழுதுகிறார்:

“ஜனவரி 30ஆம் நாள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது பாபுஜி (காந்திஜி) சுடப்பட்டார். ஒரு கை துப்பாக்கியிலிருந்து வெளியேறிய மூன்று தோட்டாக்களை தன் மார்பில் தாங்கிய அவர் நிலத்தில் சாய்ந்தார். ஒரு சில நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது. நாதுராம் கோட்சே என்கிறவன் தான் கொலையாளி. இவன் புனேயைச் சேர்ந்த ஓர் ஆர்.எஸ்.எஸ். ஊழியனும், ஒரு பத்திரிகையின் ஆசிரியனும் ஆவான்” (Story of my life - by Morarji Desai, page 248)

காந்தியாரின் செயலாளர் என்ன எழுதுகிறார்?

காந்தியாரின் செயலாளரான ப்யாரிலால் நையார் எழுதிய “மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்” (பக்கம் 70) எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவைத் தொடர்ந்து கேட்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பி னர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள்; அது மட்டுமல்ல; காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல இடங் களிலும் இனிப்புகளை வழங்கிக் கொண்டா டினார்கள்” என்று காந்தியாரின் செயலாளர் எழுதியுள்ளாரே!

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது அவமதிப்பு குற்றமல்ல: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

காந்தியார் கொலை செய்யப்பட்டது பற்றிய செய்திக் கட்டுரையை வெளி யிட்டு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலைகாரரான நாதுராம் விநாயக கோட்சே என்றும் வெளி யிட்டமைக்காக "இந்தியா டுடே'' ஏட்டின் அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி புல்லர் ஆகி யோர்மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

"இந்தியா டுடே'' ஏட்டின் முதன்மை ஆசிரியர், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந்திருந்தார். இதனை ஏற்று மேற்கண்ட மூன்று பேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ். சீமா வாதாடி னார். செய்திக் கட்டுரை அவமதிப் பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைக் குறைகூறி எதுவும் எழுதப்படவில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்றுக் கொண்டார்.

“கட்டுரையைப் படித்துப் பார்த்தால், நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர். எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்ற வர்களும் உயர்ந்து நின்றாலும் பிற் காலத்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பர். அந்த வகையில் கேட்சேயைப்பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்க மானதே. அப்படி ஆராயும்போது, அவ ரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தி னைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன'' என நீதிபதி குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட்டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிகையாளர் களுக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை யையும் ரத்து செய்து ஆணையிட்டார்.

"ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதி மன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவதூறானது எனக் கூறுவார்கள்” என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் காந்தியா¬க் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுபவர்கள் கோழைகளே!

(7) ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது தன் நிலைப்பாட்டில் மாற்றம் கண்டுள்ளதா?

மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது.

‘தினமணி’ ஏட்டில் (16.10.2000) ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத் வானி, உ.பி.முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் ஆற்றிய உரை விவரம்:

“பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும் பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லீம்களும், கிறித்தவர் களும் ஏற்று, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக் கிறது என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று கூறவில்லையா?

வேறு ஏடல்ல ‘தினமணி’யே இந்தச் செய்தியை வெளி யிட்ட பின்னர் பொழிப்புரைகளைத் தேடி ஓடி ஒளிய முடியாது.

இன்றைக்கு ராமராஜ்யம் அமைப்போம் என்றும், இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்றும் கூறி வருபவர்கள் தானே இவர்கள். இவர்கள் கூறும் ராமராஜ்ஜியம் என்பது சூத்திரன் என்று கூறி சம்புகனை ராமன் வெட்டிக் கொன்றது தானே!

இவர்களின் இந்து ராஜ்ஜியம் என்பது பிராமணன் சூத்திரன் என்ற வருண தருமத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாதுராம் கோட்சே பற்றி சொன்ன கருத்து, நூற்றுக்கு நூறு உண்மை - வரலாற்றில் கல்வெட்டாகப் பதிக்கப்பட்ட பேருண்மையாகும்.

பாலத்திற்குக் கோட்சே பெயர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் நகரத்தின் புதிய பாலத்திற்கு கோட்சே பெயர் சூட்டினார்கள்.   ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு வசுந்தரா ராஜே தலை மையில் இருந்த பாஜக அரசு நாதுராம் கோட்சேவின் பெயரை சூட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரின் தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது, இந்த மேம்பாலம் மாவீரன் பகத் சிங் நினைவு பூங்காவின் மேலே செல்வதால் இந்த பாலத்திற்கும் பகத்சிங் பாலம் என்று பெயர் சூட்ட சமுக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்தப்பாலம் 4.2.2015 அன்று திறக்கப்பட இருந்த நிலையில் அதிகாலை அப்பாலத்திற்கு ராஷ்டிரவாதி நாதுராம் கோட்சே (தேசியவாதி நாதுராம்கேட்சே பாலம்) என்று பெயர் சூட்டப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது இது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வருவதால் எங்களுக்கும் அப் பெயர் சூட்டிய நிகழ்விற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசு தரப்பிலிருந்தும் அல்வர் பாஜகசட்டமன்ற உறுப்பினர் தரப்பிலிருந்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அல்வார் மகாராஜாவின் வம்சத்தவர்கள் இந்த பாலம் கட்ட பெரும் தொகை கொடுத்ததாகவும் ஒருவேளை, அவர் களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பெயர் சூட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்றைக்கும் இந்த நிலையில்தான் ‘இந்து’ மதத்தினர் இருக்கின்றனர்.

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையி லிருந்து பிணையில் வந்த பிரக்யா சிங் என்ற சாமியாரிணி - கோட்சே மகா புருஷன் என்று கூறியுள்ளாரே - கடும் எதிர்ப்பின் காரணமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், இவர்களின் உண்மையான மனநிலை எத்தகையது என்பதைச் சிந்திப்பீர்களா!

-  விடுதலை ஞாயிறு மலர், 18.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...