சிவகங்கை, செப்.2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டறியப்பட்டன.
தற்போது கீழடியில் மணிகள் அதிகமாக கிடைத்து வருவதால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், மணிகள் செய்தல் தொழிலில் சிறந்து விளங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கெனவே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன. தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கிடைத்துள்ளன.
சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராட்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.
இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல்: அபராதம் பன்மடங்கு உயர்கிறது
சென்னை, செப்.2 திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், செப்டம்பர் 1 முதல் அமலானது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000, அதிவிரைவாகவும், பொறுப்பற்ற வகையிலும் வாகனம் ஒட்டினால் ரூ. 5,000, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000 என அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000, வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போது செல்லிடப்பேசி பயன்படுத்தினால் ரூ. 5000, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்பவர்களுக்கு ரூ. 20,000 மேலும் ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ.2,000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பொருந்தும்.
மேலே உள்ள குற்றங்களில் அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ ஈடுபட்டால், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை விட இருமடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.
சிறுவர்கள் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்வதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குறிப்பாக ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவையில்லை.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துவிட்டால் ரூ. 2 லட்சம் வரையும் விபத்தில் படுகாயமடைந்தால் அவர்களுக்கு
ரூ. 50,000 வரையும் இழப்பீடு வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
- விடுதலை நாளேடு, 2 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக