புதன், 19 பிப்ரவரி, 2020

உத்தமதானபுரம் (தஞ்சைமாவட்டம்) பெயர்க் காரணம்

திராவிடக் கட்சிகளால்தான் நாடு குட்டிச்சுவரானது...என்று ஒப்பாரி வைத்து
தமிழ்நாட்டை காப்பாற்றப் புறப்பட்டிருக்கும்
திடீர் ஊழல்ஒழிப்பு போராளிகளின்
மேலான கவனத்திற்கு...

தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் படைபரிவாரங்களுடன் பயணம் சென்றாராம்.
இடையே ஒரு இடத்தில் உணவருந்திவிட்டு,
தாம்பூலம் தரித்துக்கொண்டு மந்திரி பிரதானிகளிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.
பேச்சுவாக்கில் இன்று என்ன திதி என்று கேட்டாராம். இன்றிருப்பதை போல் அன்று நாட்காட்டி இல்லாததால் மந்திரிகள் உடனடியாக ஒரு பஞ்சாங்க பார்ப்பனரை மன்னரிடத்தி்ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பஞ்சாங்கத்தை கணித்த பார்ப்பனர்;
மன்னா, இன்று ஏகாதசி திதி என்று சொல்ல
மாவீரர் குலத்திலகமான 
மன்னாதி மன்னரும், மங்குனி மந்திரிகளும்
அதிர்ச்சியடைந்து அலறினார்களாம்! காரணம்.... ஏகாதசியன்று மன்னர் விரதமிருப்பார். உணவருந்தமாட்டார்.
ஆனால், 
இன்று உணவும் உண்டு தாம்பூலமும் தரித்தாகிவிட்டது. 
என்னசெய்வது? 
விரதபங்கமாகிவிட்டதே?
பாவம் வந்து சூழ்ந்து விட்டதே?
நரகத்திற்கு செல்லாமல் தப்புவது எப்படி?
நம்பெருமான் மோட்சத்திற்கு செல்வதெப்படி?
என ஒரே பரபரப்பு...அங்கலாய்ப்பு...

பரிகாரமென்ன பூதேவரே? என்று 
பஞ்சாங்க பார்ப்பனரின் காலைப்பிடித்து
மன்னர் கெஞ்ச...
கவலைவேண்டாம் அரசே, பரிகாரம் உள்ளது.
நீங்கள் தங்கியுள்ள இந்த இடத்தில்
கிழக்கு மேற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும்,
வடக்கு தெற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும் கட்டி, 
இரண்டு வீட்டிற்கு ஒரு கிணறு வெட்டி,
ஆகமொத்தம் நூற்றி எட்டு அந்தணர்களுக்கு
பொன்னும், பொருளும், நிலமும், பசுவும்
கொடுத்து குடியமர்த்தினால் செய்த பாவம் தீருமென்று சொன்னானாம் பஞ்சாங்கப்புலி!
அப்படியே ஆகட்டுமென்றான் மன்னன்.

அரசகட்டளை பிறந்தது!
அந்தணர்கள் மனம் குளிர தாணங்கள் வாரிவழங்கப்பட்டது...
வந்த பாவம் தொலைந்ததென்று
அகமகிழ்ந்தானம் அறிவுகெட்ட அரசன்.

உத்தமமான தானத்தை செய்ததால்
இன்று முதல் இவ்வூர் உத்தமதானபுரம்
என்று அழைக்கப்படும் என புகழ்ந்து பாடினார்களாம் புத்திகெட்ட புலவர்பெருமக்கள்!
இந்த #உத்தமதானபுரம் தஞ்சைமாவட்டம்
பாபநாசம் அருகில் உள்ளது.
இதுதான் மகாஉபாத்யாயா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்!
தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் தனது ஊரின் தோற்றத்தை எழுதியிருக்கிறார் தமிழ்தாத்தா.
 _____________________________________________

ஒருநாள் மன்னர் கிருஷ்ணதேவராயர்
சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தாராம்.என்னவென்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நிற்க....
அரண்மனை ராஜகுருவை அழைத்தாராம் மன்னர். 
வந்த ராஜகுருவின் காலில் விழுந்த மன்னரைப் பார்த்து 
மங்கலம் உண்டாகட்டும் என்று ஆசீர்வாதம் செய்தவிட்டு  ஏனிந்த கவலை? என்று கேட்டாராம் ராஜகுரு.

குலகுருவே, எனது் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது மாம்பழம் சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால்....உயர்ரக மாம்பழங்களை கொண்டுவருவதற்குள் உயிர் பிரிந்து விட்டதே... பெற்ற தாயின் கடைசி ஆசையை
நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்டேனே,
இதற்கு பரிகாரமென்ன என்று கேட்டாராம்.

அதற்கு ராஜகுரு, 
மன்னா...இதென்ன பிரமாதம்? 
நமது நாட்டிலுள்ள
வேதமறிந்த பிராமணர்களுக்கு
தங்கத்தால் மாம்பழம் செய்து
தானம் கொடுத்தால் பாவம் தீரும், தங்களது
தாயின் ஆசையும் நிறைவேறும் என்றாராம்.

மன்னரின் பாவம் தொலைக்க
மக்கள் பணத்தில் தங்க மாம்பழம் வழங்கப்பட்டது பார்ப்பனர்களுக்கு!

இப்படி மன்னராட்சி காலத்திலும்,
அதன்பிறகு வந்த வெள்ளையர் காலத்திலும்
மக்கள் பணத்தை, பொதுச் சொத்தை
அரச சுகபோகத்தை, வேலை வாய்ப்பை
ஏகபோகமாக கொள்ளையடித்த இவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு பேசுகிறார்கள்.

ஒரு அறுபது ஆண்டுகளாக.... தேர்தல் முறை வந்த இந்தகாலத்தில் 
அரசை கைபற்றிய சாமானிய மக்களுக்கு
அதை மக்களுக்குரியதாக பயன்படுத்த தெரியவில்லை.

புதிதாக உள்ளே நுழைந்தவன் கிடைத்தவரையில் சுருட்டுகிறான்.
கேள்வி கேட்பாரற்று அன்று பட்டபகல் கொள்ளையடித்த பார்ப்பனர்கள் இன்று
புனிதர் வேடம் போடுகின்றனர்.
ஊழல் ஒழிப்பு என ஆடுகின்றனர்.

சில காவல் துறையினர் சில்லறைத்திருடர்களை கண்டும் காணாமல் இருப்பது போல இருப்பார்கள். கையூட்டு பெற்றுக்கொண்டு வளர்த்தும் விடுவார்கள்.ஆனால்.....
தங்களு்க்கு ஆபத்து வரும் நேரத்தில் ,
மக்களிடத்தில் அம்பலப்படும் நேரத்தில் சில்லரைத்திருடர்களை பிடறியில் அடித்து கைது செய்து வழக்கும் பதிந்து தங்களது நேர்மையை நிலைநாட்டுவார்கள்!
இதைப்போன்றதுதான்
உயர்சாதியினரின் ஊழல் ஒழிப்பு நாடகம்!

நம்மாட்கள் கரி திருடியவன்....
பார்ப்பனர்கள் ரயிலையே விழுங்கியவர்கள்!

இன்று, ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 
ஆனால்....
உத்தமதானபுரங்களும், சதுர்வேதிமங்கலங்களும்,
மடாதிபதிகளின் கணக்கற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமா?
பறிமுதல் செய்ய போராடுவார்களா ஊழல் ஒழிப்பு போராளிகள்?

இந்திய சமூக வரலாற்றை நுட்பமாக
ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளியாமல்
இது புரியாது.

நமக்காகவே இந்த சமூகத்தை
அலசி ஆராய்ந்து தங்களது சிந்தனைகளை
பல்லாயிரம் பக்கங்களில் செதுக்கி
வைத்திருப்பவர்கள்
#அம்பேத்கரும்_பெரியாரும்.

இவர்களது எழுத்துக்களை நான்கு பக்கமாவது வாசிக்காமல் இன்றைய இளைஞர்கள் எந்த போராட்டம் செய்தாலும்
அது பயனற்றதாகும்.
பார்ப்பனர்க்கே பயனளிப்பதாகும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள்!
                                                   #Viduthalaiarasu
- 19.2.17 முகநூல் பதிவு

சனி, 15 பிப்ரவரி, 2020

காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தஞ்சையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன், ஜம்புலிங்கம், கோவிந்தராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 2 பாண்டியர்கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: காளையார் கோவிலின் பழைமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என அழைக்கப் பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேரும் ஒன்று. அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களாலும், சுந்தரேஸ்வரர் கேவில், காளீஸ்வரர் கேவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பே ரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத அளவில் காளையார்கோவிலை அமைத்துள்ளார்.

கடைச்சங்க கால பாண்டிய மன்னன் விக்கிர பெருவழுதி, கானப்பேரெயிலை கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.

அங்குள்ள கண்மாயின் உள்பகுதியில் பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலை கட்டடம் பழுதடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த உடைந்த நிலையில் உள்ள துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

இதேபோன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. அதில் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திரு விடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும்படையை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கி.பி.1325இல் வந்த அரபு நாட்டு பயணி திமிஸ்கி என்பவர் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரை பதிவு செய்துள்ளார்.

நன்றி: தினகரன் (21.12.2019)

 -  விடுதலை ஞாயிறு மலர், 15.2.20

திங்கள், 2 டிசம்பர், 2019

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்-4

ஆய்வுக்கட்டுரை

தொல்லியல் ஆய்வாளர் ச.தீபிகா

 

சோழர் காலக் கல்வெட்டுகள்

உத்திரமேரூர் குடவோலை முறை

சொல்லும் கல்வெட்டு

 

ராஜ ராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதை கூறும் கல்வெட்டு

தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர் காலக் கல்வெட்டுகள் ஆகும். சோழர் காலத்தில் 200 முதல் 300 கற்கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் பல கல்வெட்டுகள்பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் வேதியர்களுக்கும், போர் வீரர்களுக்கும், கோயில்களுக்கும் மன்னர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்அளித்த கொடைகளைப் பற்றியே குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகளில் வரலாற்றுச் செய்திகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை மிகக் குறைவே.

முன்பு கூறியதைப் போல சோழர்காலக் கல்வெட்டு ஒவ்வொன்றும் மங்களச் சொற்களைக் கூறிக்கொண்டே துவங்குகின்றது, அடுத்து அம்மனுக்குரிய வம்சாவளி செய்திகள் விளக்கப்படுகின்றன. இச்செய்திகளில் புராணங்களும் இதிகாசங்களும் கலந்து இருப்பதை நாம் காணலாம். தமிழ்க் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திகளில் மன்னர்களின் வெற்றி நிகழ்வுகளை பொறிக்கத் தொடங்கியது ராஜராஜ சோழனின் காலத்தில்தான்!

சோழர் காலக் கல்வெட்டுகள் வேதியர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களைப் பற்றிய செய்திகளை துல்லியமாக விளக்குகின்றன. அக்கிராமங்களில் வசிக்கும் வேதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், அவர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்ட செய்தியும் கோயில்சுவர் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேசப்படுகிறது. சோழர் காலத்தில் இருந்த 1300 கிராமங்களில், சுமார் 250 கிராமங்கள் பிரம்மதேய கிராமங்களாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் நில அளவை குறித்து மிகத்துல்லியமாக அளவுகோல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், தஞ்சை பெரியகோயில் எவ்வாறு வடிவமைத்து, உருவாக்கப்பெற்றது என்ற செய்தி கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

பெரும்பாலான வெளிநாட்டுச் சான்றுகளே சோழர்களுடைய வெளியுறவு, வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துரைக்கின்றன. அதற்கு சான்றாக ராஜராஜசோழன், சீன சாங் பேரரசுடன் தன் வெளிநாட்டு உறவை மேன்மைப்படுத்திய செய்தியை சீன நாட்டில் உள்ள சாங் பேரரசின் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் தாய்லாந்தின் சைலேந்திரப் பேரரசு மன்னர்களால், நாகப்பட்டினத்தில் அமைக்கப்பெற்ற சூடாமணி பௌத்த விகாரையைசோழ மன்னர்கள் போற்றி வளர்த்தனர் என்ற செய்தியை தென்கிழக்காசிய வரலாற்று ஆவணங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. சோழர்களின் சிறப்புமிக்க தென்கிழக்காசிய படையெடுப்பைக் கூறும் கல்வெட்டுகள், அவர்கள் எவ்வாறு கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர், அதற்கான வழிமுறைகளும் விளக்கங்களும் என்ன என்பன போன்ற விவரங்கள் எந்த கல்வெட்டிலும் இல்லை.

பல கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் ராஜகேசரி, பரகேசரி போன்ற பட்டங்களைத் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான கல்வெட்டுகளில் இப்பட்டங்களே காணப்படுகின்றன; மன்னனின் பெயர்கள் வருவது குறைவே.

முதல் பராந்தகனின் (கி.பி.917) உத்திரமேரூர் கல்வெட்டு ஓர் அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது.  உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் சபை ஒன்று இயங்கி வந்துள்ளது. அச்சபைக்கான அங்கத்தினர்களைத் தேர்வு செய்ய குடவோலை முறை செயல்பட்டது என்று இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர், பல்லவர் காலத்திலேயே (கி.பி.750) 1200 வேத வைஷ்ணவ வேதியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆகும். எனவே இது உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இது ஒரு வேதியர் குடியிருப்பாக  திகழ்ந்திருக்கிறது.

தமிழகக் கல்வெட்டுகளில் வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் முக்கியமான ஒன்று கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டாகும். சுந்தர சோழனின் தலைமகனும், முதலாம் ராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டது குறித்து இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்றும், வீரநாராயணசதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த சிலர் இக்கொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும், மன்னனின் ஆணையின் பெயரில் அவர்களிடமிருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் நிலங்களும், அரசு உரிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் இக்கல்வெட்டில் இருந்து அறிகிறோம்.

அகழாய்வுகளில் கிடைக்கும் செய்திகளை மெய்ப்பிக்க சில சமயங்களில் கல்வெட்டுகள் மிகவும் உதவுகின்றன. சான்றாக உறையூரில்அகழ்வாராய்ச்சியில் கி.பி. 9-10 நூற்றாண்டில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இதை மெய்ப்பிக்கும்விதமாக உறையூருக்கு அருகில் உள்ள அல்லூர் கோயிலில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய கல்வெட்டில் காவிரி வெள்ளத்தால் அல்லூர் கோயில்நிலங்கள் அழிந்தன என்று கூறப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலுக்கு 400 தளிச்சேரிப் பெண்களை பணிக்காக நியமித்தான் என்ற பெரிய கோயில் கல்வெட்டு  குறிப்பிடத்தக்க மற்றொரு கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் 400 பெண்களின் பெயர்களும், அவர்களுடைய ஊர் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  அது மட்டுமில்லாமல்,  கோயிலின் அருகே ஒவ்வொருவருக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் விளையும் நிலம் வழங்கப் பெற்றுள்ளது என்பன போன்ற செய்திகள் இக் கல்வெட்டுகளில்  மிக விளக்கமாகவும் தெளிவாகவும் பொறிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களைத் தவிர, அவர்களுக்கு முன்னர் ஆட்சி புரிந்த  பல்லவர்களின் கோயில்களையும் பேணி போற்றினர்  என்பதற்குச் சான்றாக பல சோழர் மன்னர்களின் கல்வெட்டுகள்  மகாபலிபுரத்தில்  உள்ள பல்லவர் கால  கடற்கரைக் கோயிலிலும், ஆதிவராக குடைவரை கோயிலிலும் கிடைக்கின்றன.  இக்கல்வெட்டுகளின் மூலம் பல்லவர்கள் சூட்டிய கோயில் பெயர்கள்  சோழர் காலத்திலும் அவ்வாறு வழக்கத்திலிருந்ததை  நாம் அறிய முடிகிறது. 

காலங்கள் செல்லச் செல்ல சோழர்களை அடுத்து பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்கர்களும் தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற கல்வெட்டுகளின் மூலம் செய்திகளைக் கொடுத்துச் சென்றுள்ளனர். இவற்றை ஆவணப்படுத்தும் பணிகளை இன்னும் பல அறிஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுவருகின்றனர். சங்ககாலம் முதல் சோழர் காலம் (சுமார் 1300 ஆண்டுகள்) வரையிலான தமிழகத்தின் கல்வெட்டுகளின் வரலாற்றை இதுவரை நாம் கண்டோம். அதற்குப் பிந்தைய காலக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன. மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் முறையாகப் படியெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பழங்காலக் கோயில்கள், மடங்கள், பயணியர் இளைப்பாறும் இடங்கள், குன்றுகள், மலைகள், பாறைகளில் நம் வரலாற்றுச் செய்திகள் பதிந்திருக்கின்றன. புதுப்பித்தல் என்ற பெயரில் அவற்றை அழித்துவிடாமல், மறைத்துவிடாமல் படியெடுத்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குண்டு.

(நிறைவு)

 - உண்மை இதழ் 16-31. 3. 19

ஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் - 3

ச.தீபிகா, தொல்லியல் ஆய்வாளர்

 

வட்டெழுத்துக் கல்வெட்டு

வரலாற்றை அறிவதற்கு மிகவும் துணை நிற்பவை தொல்லியல் சான்றுகளே ஆகும். அத்தகைய தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சங்ககால ‘தமிழி’ கல்வெட்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட பேரரசர்களின் கல்வெட்டு முறைகளை இக்கட்டுரையில் காணலாம்.

தமிழகத்தில் சங்க காலம் முடிவுற்ற பிறகு களப்பிரர்  ஆட்சிக் காலம் தொடங்கியது. சுமார் 300 ஆண்டுகளாக தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஆட்சிக் காலத்தைப் பற்றியும், களப்பிர மன்னர்களைப் பற்றியும் தொல்லியல் சான்றுகளோ, இலக்கியச் சான்றுகளோ நமக்கு அதிக அளவில் கிடைக்கவில்லை. இதனால் களப்பிரர் ஆட்சிக் காலம் வரலாற்று அறிஞர்களால் (தகவல்கள் இல்லாத காரணத்தால்) இருண்ட காலமாகவே கருதப்பட்டது. (இங்கு இருண்ட காலம் என்பதை மோசமான ஆட்சிக் காலம் என்பதாகக் கருதக் கூடாது.) ஆனால் தற்கால ஆராய்ச்சிகளில் களப்பிரர் கால இலக்கியங்களும், சான்றுகளும் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் வலுவிழக்க தொடங்கியது.  வட தமிழகத்தை பல்லவர்களும், தென் தமிழகத்தை பாண்டியர்களும் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து தான், பிற்காலச் சோழர்கள் தஞ்சை மற்றும் காவிரிக் கரைகளை கைப்பற்றி சோழப் பேரரசை தமிழகத்தில் மீண்டும் தொடங்கினர்.   

களப்பிரர் ஆட்சிக் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலானது. அச்சுத விக்கந்த மற்றும் சேந்தன் கூற்றன் ஆகிய மன்னர்களைத் தவிர எந்த மன்னர்களைப் பற்றியும் களப்பிரர் காலத்தில் நாம் அறிய முடியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்தப் புலவர் புத்ததத்தர் எழுதிய “வினயவிநிச்சயா” என்ற இலக்கிய நூலில் அச்சுத விக்கந்த பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த களப்பிரர் காலக் கல்வெட்டுகளின் மொழி தமிழாகவும், எழுத்து வடிவம் சங்க காலத் தமிழ் எழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்த வட்டெழுத்தாகவும் உள்ளது.

பூலாங்குறிச்சி களப்பிரர் கால கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான கல்வெட்டாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் ஒரு வரி முதல் ஆறு வரிகளை கொண்ட சிறிய கல்வெட்டாக இருக்கும். ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பல வரிகள் சிதைந்துள்ள போதிலும், அவை களப்பிரர் ஆட்சி நடந்த முறைகளைப் பற்றியும், சேந்தன் கூற்றன் என்ற அரசன் அமைத்த தேவகுலம் என்றழைக்கப்படும் கோயில்களின் வழிபாட்டு முறைகளையும், களப்பிரர்கள் வேதியர்களை ஆதரித்தனர் என்பதை விளக்குகிறது. பெரும்பாலான களப்பிரர் காலக் கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்குச் செய்து கொடுத்த படுக்கைகளைப் பற்றியே கூறுகிறது.  அதுமட்டுமில்லாமல் சுனை மற்றும் அணை போன்ற நீர் நிலைகளை சமணத்துறவிகளுக்கு அமைத்து கொடுத்ததைப் பற்றியும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இதற்கு சான்றாக ‘சித்தன்னவாசல்’, ‘ஈரெட்டிமலை’ கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

பல்லவ மண்டகப்பட்டுக் கல்வெட்டு

 

கோழிச் சண்டையை விளக்கும் அரசலாபுரம் கல்வெட்டு

அடுத்த முக்கியமான கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். இக் கல்வெட்டின் எழுத்து வடிவத்தைக் கொண்டு, தமிழிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் அடைந்ததை  நாம் அறிய முடிகிறது. அது மட்டுமில்லாமல் இசைக்குறிப்புகளுடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். ‘அரசலாபுரம்’ மற்றும் ‘இந்தளூர்’க் கல்வெட்டுகள் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற பண்பாட்டுச் சிறப்புமிக்க கோழிச் சண்டையை விளக்கும் முதல் கல்வெட்டாகும். ஒரு சுவையான செய்தியாக கோழியின் பெயர் பொற்கொற்றி என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிடைத்துள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு செய்து கொடுத்த கொடை பற்றி கூறுவதாக அமையப் பெற்றுள்ளன. ஆனால் ‘பறையன்பட்டு’ மற்றும் ‘திருநாதர்குன்று’ கல்வெட்டுகள் சமணத் துறவிகளின் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் கொள்கையைப் பற்றி விளக்குவதாக உள்ளது. ‘நெகனூர்பட்டி’ கல்வெட்டு சமணத் துறவிகளுக்குப் பெண்களும் சமணப் படுக்கைகளைக் கொடையாக அளித்தனர் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிடைக்கும் முக்கியமான பல்லவர் கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலான காலத்தவையாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு மிக முக்கியமான ஒன்றாகும். இக்கல்வெட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகவும், எழுத்து பல்லவ கிரந்த வடிவத்திலும் உள்ளது.  இக்கல்வெட்டில் “செங்கல், மரம், உலோகம், சுதை இவை  எதுவுமில்லாமல் திருமூர்த்தி தெய்வங்களுக்கு கல்லாலான கோயிலை எழுப்பினான்” என்று கூறப்பட்டுள்ளது. இக் காலம் தொட்டு, தமிழகத்தில் கல்வெட்டுகள் எழுதும் முறை முற்றிலும் மாற்றமடைகிறது.  பல்லவர்களின் சில குகைக் கல்வெட்டுகளைத் தவிர, பெரும்பாலான தமிழகத்தின் கல்வெட்டுகள் முகப்புரை, குறிப்புரை, முடிவுரை போன்ற அமைப்பிற்கு மாறத் தொடங்கின. பல்லவர் கல்வெட்டுகளில் முகப்புரையாக “திருஷ்டம்“ (பார்வையிடப்பட்டது) என்ற சொல்லே இருக்கும். இது போன்ற மங்கல வார்த்தைகளுடன் முகப்புரைகள் தொடங்கின. பிற்காலத்தில் இது போன்ற மங்கல சொற்களுக்குப் பதிலாக மங்கலக்குறிகள் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இன்னும் பல கல்வெட்டுகளில் இவைகளும் மாறி ஸ்லோகங்கள் இடம்பெறத் தொடங்கின. பெரும்பாலான இடைக்காலக் கல்வெட்டுகள் அனைத்தும் “ஸ்வஸ்திஸ்ரீ” என்ற மங்கல வாசகத்துடன் துவங்குகின்றன. மங்கலவாசகத்தைத் தொடர்ந்து அரசனின் பெயர் கல்வெட்டுகளில் இடம்பெறும். அடுத்ததாக அம் மன்னனின் வம்சாவழி மிக விரிவாகவும், விளக்கமாகவும் இடம்பெறும். பெரும்பாலும் மன்னர்களுடைய முன்னோர்கள் பற்றிய செய்திகள் கற்பனை நிரம்பிய குறிப்புகளாகவே கல்வெட்டுகளில் இருக்கும். அடுத்து கல்வெட்டுகளின் குறிப்புரையில் கொடைகளைப் பற்றிய மிக விளக்கமான குறிப்புகளைக் காணலாம்.  பெரும்பாலான கல்வெட்டுகள் கொடைகளைப் பற்றியனவே! பொதுவாக வேதியர்களுக்கும், கோயில்களுக்கும், போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் கொடை வழங்கப்படும். இவைகளைத் தவிர பல கல்வெட்டுகள் மன்னனுடைய  போர் வெற்றியை குறிப்பனவாகவும் உள்ளன. கல்வெட்டுகளின் முடிவுரையில் பெரும்பாலும் அரசு முத்திரைகள் இடம்பெறும். சில கல்வெட்டுகளில் கொடைக்கான தர்மத்தைப் பாதுகாப்போர் அடையும் பலனும், தர்மத்துக்கு இடையூறு செய்வோர் அடையும் கெடுபலனும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவ காலக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மன்னர்களுடைய பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணமும்,  அவர்கள் தாங்கள் கட்டின கோயில்களுக்கு அளித்த கொடையை குறிப்பவையாகவும் விளங்குகின்றன. பல்லவர் காலம் தொட்டு கல்வெட்டுகள் மன்னர்களுக்கும், மன்னனைச் சார்ந்த குடியினருக்கும் உரியதாக மட்டுமே விளங்க தொடங்கின. அதற்கு முன்பு எளிய மக்களும் கல்வெட்டுகளைப் பதித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.3.19

சனி, 23 நவம்பர், 2019

தேசூரில் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, நவ. 15-  தேசூ ரில் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வந்தவாசியை அடுத்த தேசூர் பகுதியில் பாழடைந்த கோட்டை மற்றும் சிலைகள் இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (பொது) ஜானகி, திரு வண்ணாமலை மாவட்ட வர லாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், பேராசிரியர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தேசூர் வருவாய் உதவியா ளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பாழடைந்த நிலை யில் ஒரு மசூதி போன்ற கட்டடமும் அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவை 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும்.

இதுகுறித்து வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறியதாவது:-

தேசூரில் கிடைத்த எழுத்து டைய 2 நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் என்றும், மற்றொன்றில் சீய மங்கலத்தில் எறிந்து பட்ட கொற் றம்பாக் கிழார் மகன் சீலன் என் றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீர னின் கையில் கத்தியும், கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப் பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடு கற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர் களுக்கிடையே மோதலோ ஏற்பட் டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற் குறிப் பிட்ட கொற்றம்பாக் கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே இப்பகுதியில் சீயமங்கலத்து பாணரைசரு என்ற வாசகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார். இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரை சர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்க வேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம்.

பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப் பிடும் கொற்றம்பாக் கிழார் இருந் திருக்க வேண்டும். கொற்றம்பாக் என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம். தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ள லாம். சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது தேசூருக்கு அருகில் 2 கிலோ மீட் டர் தூரத்தில் உள்ளது குறிப்பி டத்தக்கது.

தமிழகத்தில் கிடைத்த நடுகற் களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இது வேயாகும். இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கு சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 -  விடுதலை நாளேடு 15 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பாறைக்கீறல் ஓவியங்கள்

கிருஷ்ணகிரி, நவ. 2- ‘தமிழகத் தின் மிகப்பெரிய பாறைக் கீறல் ஓவியங்கள், வேப்பனப் பள்ளி அருகே உள்ளன’ என கிருஷ்ணகிரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நக்கநாயன பண்டா என்ற இடத்தில் உள்ள மலையில், காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அங்கு 3 இடங்க ளில் பாறையில் வரையப்பட் டுள்ள கீறல் ஓவியங்களை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 2 கிமீ தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்கிற இடம் உள் ளது. இவ்விடத்தில் உள்ள 3 பாறைகளில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின் றன. பாறை ஓவியங்களும், பாறைக்கீறல்களும், வரலாற் றுக்கு முற்பட்ட கால மக்க ளின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத் தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது போல், தற்போது தமிழகத் தின் மிகப்பெரிய அதாவது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிருந்து 50 அடி தொலைவிலேயே பெருங்கற் படைக் காலத்தை சேர்ந்த கற்திட்டைகளும் காணப்படு வதால், இப்பெரிய பாறைக் கீறலின் காலத்தையும் பெருங் கற்படைக்காலம் என தீர் மானிக்கலாம். இக்கால ஓவி யங்களில் உருவங்கள், ஒற்றை கோட்டால் வரையப்பட்டி ருக்கும். ஆனால், இக்கீறல் உருவமோ இரட்டைக் கோட் டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப் பட்டுள்ளது.

6 அடி உயரத்தில் பெண் வடிவத்தில் இருபுறம் சடை யும், உடலின் அமைப்பும் கத்தரி போலவும் உள்ளது. இருபுறமும் இரு சிற்றுருவங் கள் வரையப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் வரையப் பட்டவை என அதன் அமைப்பை வைத்து சொல்ல லாம். தலையும், கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும், உடல் கத்தரிக்கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டு உள்ளது. மூன்றாவது பாறை யில் உள்ள உருவம் இவை போன்றே இருந்தாலும், அது மிகவும் தேய்ந்து காணப்படு கிறது. கிருஷ்ணகிரி மாவட் டம் மட்டுமல்லாது, தமிழகத் தில் இதுவரை அறியப்பட்ட பாறைக் கீறல்களில் இதுவே பெரியதாகவும் இருக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு 2 11 19

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தொல்லியல்துறையின் அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வணிகமய்யம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு

நெல்லூர், நவ.3, ஆந்திர பிரதேசத்தின் நெல்லூரில் நாயுடுபேட்டா பகுதி அருகே கொட்டிபுரலு என்ற இடத்தில் இந்திய தொல்லியல் துறை முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது.  இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றையும் குழுவினர் கண்டறிந்தனர்.
இதில் பல கலை பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.  தொடக்க காலத்திற்கு உட்பட்ட பல்வேறு மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றிய ஆய்வு மேற் கொண்டதில், இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், வர்த்தக மய்யமாக செயல்பட்ட இந்த பகுதியை பற்றிய சுவாரசிய உண்மைகள் தெரிய வரும் என குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த பகுதியில் செம்பு மற்றும் காரீய பொருட்களால் ஆன நாணயங்கள், இரும்பினால் ஆன ஈட்டி, டெரகோட்டா விதைகள், கற்களால் ஆன காதணிகள் உள்ளிட்ட மற்ற கலை பொருட்களும் கிடைத்துள்ளன.  தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- விடுதலை நாளேடு, 3.11.19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...