திங்கள், 30 செப்டம்பர், 2019

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மிகப் பெரிய குத்துக்கல் கண்டெடுப்பு



கிருஷ்ணகிரி, செப்.30 குந்தாரப் பள்ளி அருகே 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய மிகப்பெரிய குத்துக்கல்லை வரலாற்று ஆய்வா ளர்கள் அண்மையில் கண்டறிந் தனர்.

கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர், மாவட்ட அரசு அருங்காட்சியகம் இணைந்து கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு வரலாறுகளைக் கண்ட றிந்து, அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என் பவருக்குச் சொந்தமான வேடங் கொல்லை என்ற விளைநிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பெரிய பெருங்கற்கால அரிய வகை குத்துக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கிருட்டிணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட் சியர் கோவிந்தராஜ் வெள்ளிக் கிழமை தெரிவித்தது:  குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.

பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து,  நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும்.  பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தேவனூர், மல்லசந்திரம், மகாராஜ கடை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம்,  மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக் கல் பலகைகள் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் காணப் படுகின்றன. சாமந்தமலையில் கண் டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும்,  11 அடி உயரமும்,  ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும்.

இந்த கல் பலகையில் விசிறிப் பாறையாக உருவம் வடிக்க முயற்சி செய்துள்ளதைக் காண முடிகிறது.

இந்த குத்துக்கல்லுக்கு மேற்கு திசையில் 250 மீட்டர் தொலைவில் இதே போன்ற ஒரு குத்துக்கல் காணப்படுகிறது.

இதுபோன்ற குத்துக்கல், தமிழகத்தில் ஒரு சில மட்டுமே உள்ளன.

இந்த ஆய்வில்,  கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, வர லாற்று ஆய்வாளர் சுகவன முருகன், சின்னப்பன் உள்ளிட்டோர் ஈடு பட்டனர்.

- விடுதலை நாளேடு, 30. 9. 19

சனி, 28 செப்டம்பர், 2019

சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செப்.28 சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ. விமல் ராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பழைமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தையும் படியெடுத்த பின்னர் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியது:

கோவானூர் முகப்பில் உள்ள ஊருணியின் கிழக்குக் கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக் கால்வாயும் உள்ளன. அந்த ஊருணி படித்துறையில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழைமையான கல்வெட்டுகள் 6 துண்டுகளாக காணப்படுகின்றன.

மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில், அரசின் வரிக் கணக்கை நிர்வகிக்கும் திணைக்கள நாயகம் பற்றியும், உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன், விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. ஆனால் இங்குள்ள ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, இந்தப் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
-  விடுதலை நாளேடு, 28.9.19

சனி, 14 செப்டம்பர், 2019

கீழடி அகழாய்வில் மேலும் ஓர் உறைகிணறு கண்டெடுப்பு




கீழடி, செப்.7 திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட  அகழாய்வில் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு பணிகளை நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற் கொண்டது.

தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணி தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை 5 பேரின்  நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப் பட்டுள்ளன.

இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜாடி உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம், உறைகிணறு ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது முருகேசன் என்பவரது நிலத்தில் மேலும், ஒரு உறைகிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றில் இதுவரை 2 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் தொல்பொருள்கள் இன்னும் உள்ளதா என்பதை கண்டறிய விரைவில் ஜிபிஆர் கருவி மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை செந்தமிழ் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கீழடிக்கு வந்து அங்கு நடைபெறும் அகழாய்வை பார்வையிட்டுச் சென்றனர்.

- விடுதலை நாளேடு, 7 .9 .19

பல்லவர் காலத்து சிலைகள் கண்டெடுப்பு




காஞ்சிபுரம், செப்.8 காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி, அய்யனார் சிலைகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத்தலைவர் க.பாலாஜி தலை மையில் ஆய்வாளர்கள் வடிவேலு மற்றும் கோகுல சூர்யா ஆகியோர் காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 7.9.2019 அன்று கள ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது கொற்றவை தேவிக்கு தனது சிரத்தை தானே பலிகொடுக்கும் அரகண்ட வீரன் சிற்பத்துடன் கூடிய கொற்றவை சிலையையும், மகளிர் வழிபடும் நிலையில் உள்ள அய்யனார் சிலையையும் கண்டறிந்தனர். இந்த சிலை குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி கூறியது: இக்கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை தேவி சிலை 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது.

8 கரங்களுடன் வலது புறம் பெரிய சூலாயுதம் காணப்படுகிறது. தலையில் மகுடமும், காதில் குழையும், கழுத்தில் அணிகலன்கள், கைககளில் வளையல்கள், கால்களில் சிலம்புடன் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறது. கொற்றவை தேவியின் இடது புறம் தன் தலையை தானே வாளால் வெட்டி பலி கொடுக்கும் அரகண்ட வீரன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

இதே கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே உள்ள புளிய மரத்தடியில் கவனிப்பாரின்றிக் கிடந்த கல்லை ஆய்வு செய்தபோது அந்தக்கல்லில் அய்யனார் சிலை செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அய்யனார் சிலை 4 அடி அகலமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள ஐயனார் சிலையின் இருபுறங்களிலும் மகளிர் கையில் சாமரம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கின்றனர்.

ஐயனாரின் காலடியில் இரண்டு குதிரைகள் காணப்படுகின்றன என்றார். இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வுத் துறையின் தலைவரும், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி கூறியது: கண்டெடுக்கப்பட்ட இந்த ஐயனார் சிலையும், கொற்றவை சிலையும் 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது என்றார்.

- விடுதலை நாளேடு, 8 .9 .19

கீழடி: தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிரமாண்டமாக கட்டியுள்ளனர்: பொறியியல் மாணவர்கள் தகவல்

, செப். 14- கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர் செங்கல் கட்டு மானங்களை பொறியியல் மாண வர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் அய்ந்தாம் கட்ட அகழாய்வில் இரட்டைச்சுவர், தொட்டி, தளம் போன்ற கட்டு மானங்கள், தாழி வடிவ பானை உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பழந்தமிழரின் தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பொருட்கள் தமிழர்களின் நாகரிகத்தையும் வாழ்வியல் முறை களையும் எடுத்துக்காட்டி வருகி றது. குறிப்பாக, இங்கு கண்டறியப் பட்ட செங்கல் கட்டுமானங்கள் அனைத்தும் பழங்காலத்திலேயே மிகச்சிறந்த கட்டுமான தொழில் நுட்பம் இருந்ததற்கு சான்றாக திகழ்ந்து வருவதுடன், தற்கால கட்டிட நிபுணர்களையும் வியப் பில் ஆழ்த்தியுள்ளது. செங்கல் கட்டுமான சுவர்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தப் பின் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தற்போது, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்டும்£ன பொறியியல் பிரிவு மாணவர்கள் 6 பேர் துறைப் பேராசிரியர்களுடன்  கீழடி அகழாய்வில் கிடைத்த இரட் டைச் சுவர் செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொறியியல் மாண வர்கள் கூறுகையில், ‘‘தொழில் நுட் பம் இல்லாத அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிர மாண்டமாக கட்டியுள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கட்டிடங்கள் இன்னும் உறு தித்தன்மையுடன் இருக்கின்றன. கட்டிடங்களின் நீளம், அகலம், உயரம், செங்கல்களின் தன்மை, செங்கல்களை இணைக்க பயன் படுத்திய பொருட்கள், கட்டிடங் களின் தாங்கு திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். 6 நாட் கள் நடக்கும் இந்த ஆய்வு முடிவில் தற்கால கட்டுமான தொழில்நுட்பத் திற்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டு மான தொழில்நுட்பத் திற்கும் உள்ள வேறுபாடுகள் நிச்ச யம் வியப்பில் ஆழ்த்தும்’’ என்றனர்.

- விடுதலை நாளேடு, 14. 9 .19

வியாழன், 12 செப்டம்பர், 2019

சிவகங்கை அருகே17ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கண்டுபிடிப்பு



சிவகங்கை, செப். 12-  சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறிய தாவது:  சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கோவானூர் பெரிய கண் மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மா யில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதி களில் கல்வெட்டு எழுத்து உள்ளது.

சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும். பொதுவாக மடைகள் கரை யோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மா யின் பள்ளமான நடுப்பகுதி யில் காணப்படுகிறது. மடைத் தூண் சுமார் 10 அடி உயர முள்ளது. தூணின் வெளிப் புறத்தில் முகம் போன்ற அழ கிய வடிவமைப்பு 2 தூண் களிலும் காணப்படுகின்றன என்றார்.

- விடுதலை நாளேடு, 12 .9 .19

வியாழன், 5 செப்டம்பர், 2019

கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு



கீழடி, செப்.5 சிவ கங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அரு கருகே 2,500 ஆண்டு களுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப் பட்டன.

கீழடியில் 2015-ஆம் ஆண்டு  மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான  தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு நடத்தியது. அதன்பின் தமிழக தொல்லியல்துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக 5-ஆம் கட்ட அகழாய்வு, தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 5-ஆம் கட்ட அகழாய்வுக்காக 5 பேர்களின் நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக்குவளை, தண்ணீர் கோப்பை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் முருகேசன் என்பவரது நிலத்தில் புதன்கிழமை தோண்டப்பட்ட குழியில், தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி ஆகியவை அருகருகே கண்டெடுக் கப்பட்டன.

- விடுதலை நாளேடு, 5.9.19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...