புதன், 4 செப்டம்பர், 2019

கீழடி அகழாய்வில் தானியம் சேகரிக்கும் மண்பானை கண்டெடுப்பு



சென்னை, ஆக.31 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், நெல் உள்ளிட்ட தானியம் சேகரிக்கும் பெரிய மண் பானை வெள்ளிக்கிழமை கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொண்டது. அதில், கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருள்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை என்றும், இதன் மூலம் நகர நாகரிகம் கீழடியில் இருந் ததும் தெரியவந்தது.    தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக்கொண்டது. அதையடுத்து, தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. கடந்த ஜூன்  13 -ஆம் தேதி முதல் 5-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை, முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட் டுள்ளன. அவற்றில், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. மேலும், சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியனவும் கண்டறியப்பட்டுள்ளன.       இந்நிலையில், வெள்ளிக்கிழமை முருகேசன் என்பவரது நிலத்தில், நெல் உள்ளிட்ட தானியங்களைச் சேகரிக்கும் பெரிய மண்பானை கிடைத்துள்ளது. இதன்மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன் தானியங்களைச் சேகரிக்க மண்பாண்டப் பொருள் களை பயன்படுத்தியதும், விவசா யத்திலும் இப்பகுதி சிறந்து விளங் கியதும் தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 31. 8. 19

கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டெடுப்பு



திருப்புவனம்,ஆக.16, கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழ டியில் அய்ந்தாம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப் பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட சுவர் கிடைத்திருப்பதால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. வேறு  பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் அகழாய்வு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் வாய் அகன்றும், உட்புறம் குழி போன்ற அமைப்புடன் கூடிய பழங்கால மண் கிண் ணம் போன்ற பாத்திரம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. இதை சுடுமண் பாத் திரம் என்றும் கூறுகின்றனர். சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கிண்ணம் உட்புறம் கருப்பு, வெளிப்புறம் சிவப்பு வண்ணத்தில் உள் ளது. இது பண்டை காலத்தில் உணவு சாப்பிட பயன்படுத்தப் பட்ட மண் கிண்ணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. நீண்ட சுவர், சுடுமண் பாத்திரம்  போன்ற பொருட் களை தேடித்தான் கடந்த சில நாட்களாக தமிழக தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் மண் கிண்ணம் கிடைத்திருப்பது தொல்லி யல் ஆய்வாளர்களை உற்சா கப்படுத்தியுள்ளது.

- விடுதலை நாளேடு, 16. 8. 19

திங்கள், 2 செப்டம்பர், 2019

குன்றக்குடி மலைப்பகுதியில் பழங்காலக் குகை, ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம், செப்.2  ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் குன்றக் குடி மலைப் பகுதியில் பழங்கால குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட் டுள்ளன.
மீனாட்சிபுரம் குன்றக்குடி மலைப் பகுதியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாள ருமான போ. கந்தசாமி, முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவர் இருளப்பன், இளங்கலை ஆங்கில இலக்கியப் பிரிவு மாணவர் அந்தோணி, மாங்குடியைச் சேர்ந்த மலைக்கனி ஆகியோர் பழமை யான குகைகள், பழங்கால மக் கள், சித்தர்கள் வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண் டறிந்துள்ளனர்.
இது குறித்து உதவிப் பேராசிரி யர் போ.கந்தசாமி கூறியதாவது:
இந்த மலையில் பெரிய குகை ஒன்று இரண்டு பிரிவாக உள்ளே நீண்டு செல்கிறது. உள்ளே தவழ்ந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் அருகே உள்ள புத்தூர் மலை சமணர் மலை ஆகும்.
இப்பகுதியில் சமண முனிவர்கள், சித்தர்கள் இக்குகைகளைப் பயன் படுத்தி இருக்கலாம்.
மேலும் பாறை இடுக்குகளில் அறை போன்று அமைத்து வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு பாறையில் மட்டும், வெள்ளை நிறக் கோடுகளால் குறுக்கு நெடுக்காக ஓவியம் வரையப் பட்டுள்ளது. இந்த உருவம் பழங்காலத் தில் வாழ்ந்த ஒருவகை விலங்கைக் குறிக்கிறது.
அதன் அருகே உள்ள பாறையில் நந்தி போன்று கோடு உருவம் உள்ளது. இம்மலையில் ஒரு பகுதியில் சமணப் படுக்கை உள்ளது.
இம்மலைக்கு அருகிலேயே உள்ள ஆமைமலையில் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட 5,000 ஆண்டு களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வரைந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.
இம்மலையில் சிறு, சிறு குகை களில் கற்கால மனிதர்களின் வாழ் வியலை வெளிப்படுத்தும் வகையில், வரையப் பட்ட இப்பாறை ஓவி யங்கள் வெள்ளை நிறத்தில் மூன்று குகைகளில் தீட்டப் பட்டுள்ளன. பல வீரர்கள் விலங்குகளை ஆயுதங் களால் தாக்குவது, சூரி யன், புலி, யானை போன்ற உருவங்கள் காணப் படுகின்றன. வேட்டைக்காட்சி யில் குழுத்தலைவன் கிரீடம் அணிந் துள்ளார். மற்றொரு மலையின் கீழ்ப்பகுதி யில் உள்ள குகையில் ஒருவர் தியானம் செய்யும் காட்சி உள்ளது.
இந்த இடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 2.9.19

கீழடி அகழாய்வில் சூது பவளம், செப்புப் பொருள் கண்டெடுப்பு

சிவகங்கை, செப்.2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டறியப்பட்டன.
தற்போது கீழடியில் மணிகள் அதிகமாக கிடைத்து வருவதால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், மணிகள் செய்தல் தொழிலில் சிறந்து விளங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கெனவே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன. தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கிடைத்துள்ளன.
சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராட்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.
இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
- விடுதலை நாளேடு,,2.9.19

சனி, 31 ஆகஸ்ட், 2019

4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு

தருமபுரி, ஆக.31  தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், தாளப்பள்ளம் காடு என்ற இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் சீல நாயக்கனூர் அமைந்துள்ளது.  இக் கிராமத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் இருப்பது குறித்து தகவலறிந்து, நல்லாம் பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அன்பழகன்,  சீலநா யக்கம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் கோ. திருப்பதி, அளே புரம் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில்,  அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அரியவகை தொல்லியல் சின்னங்களான இரண்டு பாறைக் கீறல் ஓவி யங்கள் இருப்பதைக் கண்டறிந் தனர்.  இப் பாறை கீறல் ஓவியங் களை மேலாய்வு செய்த த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் கூறியது:
இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த பண்பாட்டுச் சின் னங் கள் ஆகும்.  இக்கீறல் ஓவியங் களில் ஒன்று குண்டுப் பாறை யிலும் மற்றொன்று சமதளமாக உள்ள பாறையின் உயரமான முகப்பிலும் கீறப் பட்டுள்ளன.  இரண்டிலும் மாட்டின் உரு வம் திமிலுடன் சற்று விரிந்து,  நீண்ட கொம் புகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.  இவற் றின் அழகிய வடிவமைப்பும், நேர்த்தியும் போற்றத்தக்க வகையில் உள் ளன.  தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரலாற் றுக்கு முற்பட்ட  காலத்தைச் சார்ந்த பாறைக் கீறல் ஓவியங்கள் கிடைத் துள்ளன.
இதில், சீலநாயக்கனூர் பாறைக் கீறல் ஓவியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக உள் ளன.  இவற்றின் தன்மைகளுக்கு இணையான பாறைக் கீறல் ஓவியங்களை புகழ் பெற்ற புதிய கற்கால வாழிடமான கர்நாடக மாநிலம்,  பெல்லாரி வட்டத்தைச் சேர்ந்த குப்கல்-சங்கனக்கல் என்ற இடத்தில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள் ளப்பட்ட அகழாய்வுகள்,  இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாடும்,  பெருங்கற்காலப் பண்பாடும் ஒன்றை அடுத்து ஒன்றும் கலப்புற்ற நிலையில்  உள்ளதும் அறியப்பட்டிருப் பதால்,  இவற்றின் காலத்தை இன்றைக்கு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கலாம்.  மேலும், தருமபுரி மாவட்டத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் அதிக அள வில் அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 - விடுதலை நாளேடு, 31.8.19

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிப்பு



சிவகங்கை, ஆக.30 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட குழாய் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால மக்கள் பயன்படுத்திய தொட்டி மற்றும் தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து28.8.2019 அன்று  மேற்கொண்ட அகழாய்வின் போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பழங்கால குழாய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தண்ணீர் தொட்டி , தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிப்பை தொடர்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் புழக்கத்துக்கு தேவையான நீரினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்கு இதுபோன்ற வடிகால் மற்றும் குழாய்களை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 30.8.19

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வாணியம்பாடி அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு



வாணியம்பாடி, ஆக.21  திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது:  வாணியம் பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதி யாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங் காங்கே நடுகற்கள் அமைக்கப் பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

அதன்படி, சின்ன வட சேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட் டுள்ளது. அதன் அமைப்புப் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பல கைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடி வம் என்று பெயர். இந்த நடுகல் லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலை யில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டுள்ளான். இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள்  இக்கல்லை வழிபடுகின்றனர்.

மற்றொரு நடுகல்...

மேல்குப்பம்-சின்ன வடசேரி எல்லையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு நடுகல் காணப்படுகிறது.

இது உடன் கட்டை நடுகல் ஆகும். கும்பிடும் நிலையில் ஓர் ஆண் உருவமும், அதன் அருகே பெண் உடன் கட்டை ஏறிய தற்கான அடையாளத்தோடு நடுகல் காணப் படுகிறது.

இந்த நடுகல் சேத மடைந்து சரியான உருவமின்றிக் காணப் படுகிறது. இந்த நடுகல் லை இவ்வூர் மக்கள் தேசத்துமாரி என்ற பெயரில் வழிபட்டு வரு கின்றனர்.

இவ்வூரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வர லாற்றுத் தடயங்கள் வெளிப் படும் என்றார் அவர்.

- விடுதலை நாளேடு, 21.8.19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...